பாராயணம்

ஸ்ரீமத் சண்முகசுவாமி இயற்றிய
பனசைப் பெரிய நாயகி மாலை
பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் உரையுடன்

விநாயகர் வணக்கம்
கட்டளைக்கலித்துறை

நலம்ஆர் பனசை நகர்வாழ் பெரியநல் நாயகிமேல்
பலம்ஆர் தமிழின்நல் பாமாலை சூடப்  பயோதரம்போல்
குலம்ஆர் அருளை அடியேன் அகத்தில் குறைவறப்பெய்
வலம்ஆர் சடையர் அருள்ஆண்ட தும்பியை வாழ்த்துவனே.

 பனசை எனப்படும் திருப்பனந்தாள் நகரம் இயற்கையான அழகு பொருந்திய நகரம் ஆகும். இந்நகரில் வாழும் நல்ல பெரிய நாயகி என்னும் அம்பிகையின் பேரில், வலிமை பொருந்திய தமிழ் மொழியில் நல்ல பாடல்களாகிய மாலையைப் புனைந்து, அந்த அம்பிகை அணிந்து கொள்ளும் படியாகச் சமர்ப்பிப்பதற்கு வரம் தருக என யானைமுகப் பெருமானை வாழ்த்துகிறேன். மேகம் போல் அருள் தொகுதியை அடியேனாகிய என்மனத்தில் குறைவிலா நிறைவாகப் பெய்பவரும், வெற்றி பொருந்திய சடையப்பரின் அருளை ஆண்டவரும் அவ்விநாயகப் பெருமானே ஆவார்.

பெரியநாயகி துதிகள்
(கட்டளைக் கலித்துறைகள்)

சங்கு ஆர் கரமும் திருஆர் உரமும் தாங்கியமால்
தங்காய்! அடியேன் வினைதீர்த்து அருள்எழில் தாங்கும்,வரை
மங்காய்! மதிச்செஞ் சடையப்ப தேவன் மகிழ்ந்து அணையும்
நங்காய்! பனசை நகர்வாழ் பெரியநல்   நாயகியே!

சங்கு பொருந்திய திருக்கரத்தை உடையவரும், ஸ்ரீ தேவியைத் தாங்கிய திருமார்பு பொருந்தியவரும் ஆகிய திருமாலின் தங்கையே! அடியவனாகிய என்னுடைய தீவினையைத் தீர்த்து அருள்புரியும் பேரழகு தாங்கிய (இமய)மலைப் பெண்ணே! பிறைச்சந்திரனைச் சூடிய, சிவந்தசடையை உடைய தேவதேவனாகிய பெருமான் மகிழ்ச்சியுடன் தழுவிக்கொள்ளும் நங்கையே! பனசை நகரில் வாழும் நல்ல பெரிய நாயகியே! தாமரை மலர்போன்ற உன் திருவடியைப் புகழ்ந்து வாழ்வோம்.

அன்றுஏர் இமய வரைமகவு ஆகி அமர்ந்தஅருள்
குன்றே! அடியேன் வினைதீர்த்து அருள்எழில் கூத்துஉகந்து
மன்றுஏய் பரமன் மகிழ்காம வல்லி! மெய் மாதவர்சூழ்
நன்று ஏய் பனசை நகர்வாழ் பெரியநல்   நாயகியே!

காலக் கணிப்புக்கு அடங்காத முன்னொரு காலத்தில் இமயமலையரசனின் அழகிய மகளாக ஆகிக் கருணை நிலைபெற்ற குன்றமே! அடியவனாகிய என் தீவினையைத் தீர்த்தவளே! அருளும் அழகும் பொருந்தத் திருநடனம் ஆடுதலை விரும்பிப் பொது மன்றத்தில் பொருந்திய பரமனின் திருவுளம் மகிழும்படியான விருப்பம் தரும் கொடியே! உண்மையான பெரிய தவசிகள் சூழ்ந்து நன்றாகப் பொருந்தி வாழ்கின்ற பனசை நகரில் எழுந்தருளியுள்ள நல்ல பெரிய நாயகியே! தாமரை மலர் போன்ற உன் திருவடியைப் புகழ்ந்து வாழ்வோம்.

சந்து ஆர் தடமுலைத் தாடகை சாத்து(ம்)நல் தாரினைமுன்
இந்துஆர் மணிமுடி சாய்த்து அணி யும், சடை ஈசன் மகிழ்
பந்துஆம் எனு(ம்)முலைப் பாவாய்! அடியேன் பணிஉகந்துஆள்;
நந்துஆர் பனசை நகர்வாழ் பெரியநல்    நாயகியே!

 சந்தனம் அப்பிய பெரு மார்பினைக் கொண்ட தாடகை என்னும் பெண் அணிவிக்கும் நல்ல மாலையைப் பிறையும் மணியும் பொருந்திய முடியை அவள் முன்னே சாய்த்து ஏற்றுக் கொண்ட சடையப்பனாகிய கடவுள் மகிழும்படியாகப் பந்து என்று சொல்லும்படியான திருமார்பகங்களை ஏந்திய பொம்மை போன்றவளே! அடியவனாகிய யான் செய்யும் கடமைகளை விரும்பி ஏற்பாயாக. நன்னீராட்டுக்காகச் சேகரித்த சங்குகள் நிறைந்து பொருந்திய பனசை நகரில் வாழும் நல்ல பெரிய நாயகியே! தாமரை மலர் போன்ற உன் திருவடியைப் புகழ்ந்து வாழ்வோம்.

 மடக்கு

 நாரார் பனசை வலைதீர்ந்து அடியார்கள் நல்கதியை
 நாரார் பனசை மலர்தூய்த் தொழுதுமுன் நண்ணஅருள்
 நாரார் பனசை வலம்ஆம் எனும், குழல் நங்கைமுன்வா
நாரார் பனசை நகர்வாழ் பெரியநல்    நாயகியே!

பசுவின் கன்றுக்குட்டிகள் நிறைந்து பொருந்தியுள்ள பனசை நகரில் வாழும் நல்ல பெரிய நாயகியே! பாசியை உண்ணும் தீய ஆசையாகிய வலையில் சிக்குதலிலிருந்து விடுபட்டு, அடியவர்கள் நற்கதியாகிய மோட்ச கதியை அடைவதற்காகத், தண்டில் நார்பொருந்திய தாமரை மலரை உன்பாதத்தில் தூவி நெருங்குகையில், அவர்களுக்கு நீ ‘அருளும் அன்பும் பொருந்திய பலவாகிய நல்விருப்பங்கள் வெற்றியடையும்’ என்று அருள்வாக்குச் சொல்வாய். அவ்வாறு அருள்செய்யும் நீ என் முன்னே வருவாயாக.

கண்ணும் மணியும் மணியொடு பாவையும் காண்பகலும்
விண்ணும் புனலும்நல் வாயுவும் பாரும் மிளிர்அனலும்
பண்ணும் பதியும்நல் ஆன்மாவும் ஆகிப் பரந்து என்முனம்
நண்ணும் பனசை நகர்வாழ் பெரியநல்    நாயகியே!

பனசை நகரில் வாழும் நல்ல பெரிய நாயகியே! நீ என் கண்ணாக இருக்கிறாய். கண் இமைகளுக்குள் இருக்கும் மணியாக இருக்கிறாய். அந்த மணிக்குள் இருக்கும் கருவிழிப் பாவையாக இருக்கிறாய். அந்த விழியால் பார்க்கக் கூடிய பகலாக - ஒளியாக இருக்கிறாய்; ஆகாயமாக இருக்கிறாய்; நீராக இருக்கிறாய்; நல்ல காற்றாக இருக்கிறாய்; உலகமாக இருக்கிறாய்; புகழ்வாய்ந்த நெருப்பாக இருக்கிறாய்; இசையாக இருக்கிறாய்; தலைவியாக இருக்கிறாய்; நல்ல ஆன்மாவாக விரிவுபட்டு என்முன்னே நெருங்கி இருக்கிறாய். தாமரை மலர் போன்றஉன் திருவடியைப் புகழ்ந்து வாழ்வோம்.

தொனி அலங்காரம்

புத்தூரும் வல்லம் புலியூரும் மாசடைப் புண்ணியன்ஊர்
சித்தூரும் மாதவர் சேர்ந்தூர் கயிலைச் சிகரம்விட்டுப்
பித்தூர் அடியன் உளத்தூரில் வந்து பிறங்கியதேன்?
நத்தூர் பனசை நகர்வாழ் பெரியநல்    நாயகியே!

 புற்றில் ஊர்வதாகிய பாம்பும், பிறைச் சந்திரனும் புண்ணியனாகிய பெருமானின் சடையில் இயங்கும். இப்புண்ணியனின் ஊர் பனசை ஆகும். சித்துகள் செய்யும் பெரிய தவசிகள் சேர்ந்தவூர் இவ்வூரே ஆகும். யாவரும் விரும்பிவந்து சேரும் ஊராகிய பனசை நகரில் வாழும் நல்ல பெரிய நாயகியே! உன் இடமாகிய கயிலாய உச்சியை விட்டு நீங்கிப் பித்துப் பிடித்த அடியவனின் உளமாகிய ஊரில் வந்து நிலையாகத் தங்கியது ஏன்? தாமரை போன்ற உன் திருவடியைப் புகழ்ந்து வாழ்வோம்.

மாடும் பொருளும்நல் மக்களும் மாதரும் வாழ்மனையும்
தேடும் நிலமும் திரமல்ல என்று, உனைத் தேர்ந்த,தவர்
பாடும் பரிசுஅறிந்து உன்பாத பங்கயம் பாடஅருள்
நாடும் பனசை நகர்வாழ் பெரியநல்    நாயகியே!

 செல்வமும், பொருளும், நல்ல பிள்ளைகளும், நல்ல பெண்களும், குடியிருக்கும் வீடும், தேடிப் பெறும் வயலும் நிலையானவை அல்ல என்று உணர்ந்து, நீயே நிலையானவள் என்பதால் உன்னைத் தவசிகள் தெரிவு செய்வார்கள். அத்தவசிகள் கவிதைபாடும் உபாயம் அறிந்து, உன்னுடைய திருவடித் தாமரையைப் புகழ்ந்து பாடப் பனசை நகரை நாடி வருவார்கள். அப்படிப்பட்ட பனசை நகரில் வாழும் நல்ல பெரிய நாயகியே! தாமரை மலர் போன்ற உன் திருவடியைப் புகழ்ந்து வாழ்வோம்.

கல்லா மனத்துக் கடையேனை ஆண்டு கருணைசெய
வல்லாய் என்று உன்பதம் வந்துஅடைந் தேன், வினை மாற்றிடுவாய்
செல்ஆம் குழல்,மலர்ச் செவ்வாய் வரைகுயச் சிற்றிடைசேர்
நல்லாய்! பனசை நகர்வாழ் பெரியநல்     நாயகியே!

ஞானநூற் கல்வி கற்காத மனத்தைக் கொண்ட காரணத்தால் கடையவன் ஆகிய எனக்கும் அருள்செய்ய வல்லவள் நீயே என்பதை அறிந்து, வந்து உன் திருவடியை அடைந்தேன். என் தீவினையை நல்வினையாக மாற்ற வேண்டுகிறேன். சூல்கொண்ட கருமேகத்துக்குச் சற்றும் வேறுபாடற்ற கருநிறக் கூந்தலையும், மலர்போன்ற மெல்லிய சிறுத்த திருவாயினையும், மலைபோன்ற திருமார்பகங்களையும், சிறிய இடையினையும் உடைய நல்ல பெண்ணே! பனசை நகரில் வாழும் நல்ல பெரிய நாயகியே! தாமரை மலர் போன்ற உன் திருவடியைப் புகழ்ந்து வாழ்வோம்.

காட்டும் இரவியும் கண்ணையும் போலக் கலந்துஉயிரை
ஆட்டும் பரமன் அகத், தா மரையில் அழகுஒழுகத்
தீட்டும் உயிரின்நல் ஓவிய மே, வினை தீர்அருளை
நாட்டும் பனசை நகர்வாழ் பெரியநல்    நாயகியே!

உலகப் பொருள்களை விளங்குமாறு தெரிவிக்கும் சூரியனையும், காணும் கண்ணையும் போல உயிருள் கலந்து, செயற்படவைப்பவன் இறைவன். அப்பரமன் தன் மனமாகிய தாமரையில் அழகு ஒழுகும்படியாக நல்ல உயிரோவியமாக அம்பிகையைத் தீட்டியுள்ளான். அப்படியான, பரமனின் இதயகமலத்து உயிரோவியமே! வினையைத் தீர்க்கக் கூடியதும், காருண்யத்தை நிலைநாட்டக் கூடியதுமாகிய பனசை நகரில் வாழும் நல்ல பெரிய நாயகியே! தாமரை மலர் போன்ற உன் திருவடியைப் புகழ்ந்து வாழ்வோம்.
வாழ்த்து

கதிவாழ்க! வேதம்நல் ஆகமம் வாழ்க!நல் கண்மணிஉன்
பதிவாழ்க! சைவம், தருநீறும் வாழ்க! நல் பாவலர்தம்
மதிவாழ்க! அந்தணர் ஆனிரை வாழ்க!நல் மண்ணிஎனும்
நதிவாழ் பனசை நகர்வாழ் பெரியநல்     நாயகியே!


நல்ல, மண்ணி என்னும் நதி பாய்தலினால் வாழும் பனசை நகரில் எழுந்தருளியுள்ள நல்ல பெரியநாயகியே! நற்கதி வாழட்டும்! வேதம் வாழட்டும்! நல்ல ஆகமங்கள் வாழட்டும்!கண்மணியான உன் நல்ல கணவன் வாழட்டும்! சைவசமயம் வாழட்டும்! சைவம் கொடுக்கின்ற திருநீறு வாழட்டும்! நல்ல கவிஞர்களுடைய அறிவு வாழட்டும்! அந்தணர்கள் வாழட்டும்! பசுக்கூட்டங்கள் வாழட்டும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நத்துஏறு கரத்து அரியும், நலம்ஏறு மறையவனும் நாடிக் காணும்
பித்துஏறு மனத்தினராய்ப் பிலம், ஏறு ககனம்அதில் பெரிதும் நேடி
மத்துஏறு ததியாக மதிஏறு சடைமுடியர் மகிழ்ந்து சேரும்
புத்துஏறு பொழில்பனசைப் பெரியநாயகி மலர்த்தாள் புகழ்ந்து
 வாழ்வாம்.

பாஞ்சசன்யம் என்னும் சங்கு ஏறிய திருக்கரம் கொண்ட திருமாலும், நன்மைகள் மேன்மேலும் பெருக ஓங்கும் அந்தணராகிய பிரமதேவரும், பெருமானை நெருங்கிக் காணவேண்டும் என்ற ஞான உன்மத்தம் பெருகிய மனோநிலையில் கீழ்நோக்கியும், வான்நோக்கியும் சென்றுமிகவும் தேடினர். மத்தால் கடையப்படும் தயிர்போல அலைந்தார்கள்.பிறைச்சந்திரன் ஏறிய சடையைக் கொண்ட சிவன், மகிழ்ந்து வந்து தங்கியுள்ளதும், புதுமை மிகுந்த சோலை உடையதுமாகிய பனசைப் பெரியநாயகியின் தாமரை மலர்த்திருவடியைப் புகழ்ந்து வாழ்வோம்.

பெரியநா யகித்தாய்  பெரும்புகழ் வாழ்க!
அரியசெஞ் சடைஎம் அப்பன் வாழ்க!

⇭⇭⇭