புராணம்

அடுத்தவருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

ஒருவர் இன்னொரு முனிவருக்குச் சொன்னதாகத் தல புராணங்கள் அமையும். அந்தக் காலத்தில் புத்தகங்கள் முதலியவை இல்லை. முனிவர்களும், யோகிகளும் தாம் அனுபவத்தில் அறிந்த உண்மைகளை மற்றவர்களுக்குச் சொல்வார்கள். திருப்பனந்தாளில் நாககன்னிகை பூஜை செய்து கொண்டிருந்த நேரம்...

அரித்துவசன் என்ற மன்னன் அப்போது திருநாகேஸ்வரத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தான். அகத்தியர் திருநாகேஸ்வரத்துக்குப் போனார். மன்னனிடம் "நான்கு வகையான செல்வங்களை வேண்டி வழிபாடு செய்து கொண்டிருக்கிறாய் அல்லவா அவற்றை உனக்கு அளிக்கக் கூடிய தலம் ஒன்று உண்டு. அது திருப்பனந்தாள். அங்குச் சென்று வழிபடு" என்றார். அவனும் அவ்வாறே சென்றான். அங்கே நாககன்னிகையை சந்தித்தான். அது திருமணத்தில் முடிந்தது என்பது புராணம்.

அகத்தியர் அடுத்தவருக்குத் திருப்பனந்தாளை அறிமுகப்படுத்தியது போலப் பக்தர்கள் ஒவ்வொருவரும் தல மகாத்மியத்தை அடுத்தவருக்குச் சொல்ல வேண்டும். தல புராணத்தைப் படிப்பது, அடுத்தவருக்கு எடுத்துச் சொல்வது, சிந்திப்பது அனைத்தும் புண்ணியப் பலனைத் தரக்கூடிய செயல்களே ஆகும்.

கண்ணை மறைக்கும் கால சர்ப்பதோஷம்!

நாகதோஷங்களில் மிகவும் சக்தி வாய்ந்த தோஷமாகக் கால சர்ப்ப தோஷத்தைச் சொல்வார்கள். ஒரு ஜாதகருடைய ஜனன ஜாதகத்தில் ராகுவுக்கும் - கேதுவுக்குமிடையே எல்லாக் கிரகங்களும் இருக்குமானால் அந்த ஜாதகம் கால சர்ப்ப தோஷ ஜாதகம் எனப்படும். ஒன்று அல்லது இரண்டு  வெளியில் இருந்தாலும் கால சர்ப்ப தோஷமே என்பவர்களும் உண்டு.

கால சர்ப்ப தோஷம் எப்படிப் பட்டது தெரியுமா?

ஒரு ஊரில் பெரிய தனவந்தன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு லட்சாதிபதி. ஆஸ்திகளுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தான். அவனிடத்தில் எப்போதும் தர்ம சிந்தனை குடி கொண்டிருந்தது. தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுக்கக் கூடிய வள்ளல் தன்மை படைத்தவனாக இருந்தான். கொடுத்தால் செல்வம் குறையத்தானே செய்யும்? காலப் போக்கில் அவன் கையில் இருந்த பொருள்கள் கரைந்தன. இருந்தாலும் அவன் அறச் செயல்களை நிறுத்த விரும்பவில்லை. நில, புலன்களை விற்றான்; வண்டி வாகனங்களை விற்றான். விற்ற பொருளால் தான தர்மங்களைச் செய்தான். ஊரிலிருந்த கோயில் குளங்களுக்குத் திருப்பணிகளைச் செய்தான்.

காலப்போக்கில் அவனிடம் இருந்த எல்லா பொருள்களையும் விற்க வேண்டியதாயிற்று. வீடு வாசல் இல்லாத நிலையையும் அடைந்தான். சிறு சிறு பொருள்களைக் கூட விற்றான். கடைசியில் மிஞ்சியிருந்தது ஒரு சிறிய மனை மட்டும்தான்.

அந்த மனை கோயிலுக்கு அருகில் இருந்தது. முழு மனையளவு கூட இல்லை. அதன் நடுவிலே ஒரு பெரிய மேடு இருந்தது. அந்த மேட்டில் பட்டுப் போன பழைய மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது. எல்லாவற்றையும் இழந்த செல்வந்தன் அந்த மனையில் குடியேறினான். மரத்தைச் சுற்றிச் சில கால்களை நட்டான். சிறிய பந்தலைப் போட்டான். அதன் நிழலில் வசித்து வரலானான்.

அந்த நிலையில் அவனுடைய நெருங்கிய நண்பர்கள் "ஏன் இப்படித் தரித்திரத்தில் குடியிருக்க வேண்டும்? இந்த மனையில் ஒரு சிறிய வீட்டை கட்டிக் கொள்ளலாமே" என்று அறிவுரை சொன்னார்கள்.

வீடு கட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை. தன் நண்பர்களிடம் "நான் இறந்த பின் என்னை இந்த இடத்தில் புதைத்து விடுங்கள்" என்று வேண்டிக் கொண்டான். அவர்களும் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டனர்.

சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் அவன் காலமானான். நண்பர்கள் சமாதி கட்டப் பூமியைத் தோண்டினார்கள். சில அடிகள் தோண்டியவுடன் ‘ணங்’ என்ற சத்தம் கேட்டது. மெல்ல தோண்டிப் பார்த்த போது பல பித்தளைக் குடங்களில் பொற்காசுகளும், நவரத்திரனங்களும், புதைத்து வைக்கப்பட்டிருந்தன.

வெளியில் எடுத்த நண்பர்கள் அளவுக்கதிகமான செல்வத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

ஆம் இதுதான் கால சர்ப்ப தோஷத்தின் விளையாட்டு. தனக்குக் கீழ் விலைமதிப்பற்ற பொருள்கள் இருந்தும் அறியாமல் காலத்தைக் கழித்தான் அந்த ஏழை. கண்ணை மறைப்பதுதான் கால சர்ப்ப தோஷம். கால சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட வழி செய்யக்கூடியவர் திருப்பனந்தாள் ஸ்ரீ அருணஜடேஸ்வரர் என்பதில் ஐயமில்லை.

கடவுளால் காமத்தை விளக்கினான்!

மனிதனுக்குப் பார்வைக் கோளாறு இருக்கக் கூடாது. எதைப் பார்த்தாலும் தெய்வீகக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். ரவிவர்மா எழுதிய பார்வதி பரமேஸ்வரர் ஓவியத்தைக் காட்டி எப்படியிருக்கிறது என்று ஒரு நண்பனிடம் கேட்டேன். அதற்கு அவர், திருவிளையாடல் சிவாஜி, சாவித்திரி போல் இருக்கிறது என்றார். அவர் கண்ணோட்டத்தில் தெய்வப் படத்தில் மனிதன் தெரிந்தான். ஆனால் காமத்தில் கூடக் கடவுளைக் கண்ட நெறி தமிழர் நெறி, பக்தி நெறி.

45 வயதைத் தொட்டாள் ஒரு பெண் வயது காரணமாக அவள் மார்பகங்கள் சற்றுச் சரிந்தன; வளைந்தன. அதை வர்ணிக்கிறான் கவிஞன். காவிரிக்கரையோரம் திருப்பனந்தாள் என்றொரு தலம் இருக்கிறது அங்கே லிங்கம் தாடகை என்பவளுக்காக வளைந்திருக்கிறது. அங்கே லிங்கம் சற்றே வளைந்தது போல இவள் மார்பு வளைந்திருக்கிறது என்கிறது பூவணநாதர் உலா.

யார் அந்த தாடகை?

செஞ்சடையப்பரை வழிபட்ட தாடகை கம்பராமாயணத்தில் இராமனால் வதம் செய்யப்பட்ட அரக்கியான தாடகை அல்லள். அவள் சைவாச்சார்யர் குலத்தைச் சேர்ந்த பெண் என்று சிலர் சொல்வர். தேவ உலகத்தில் பலவகையானவர்கள் வாழ்கிறார்கள். கின்னரர், கிம்புருடர், யக்ஷர் எனப்படும் இயக்கர் முதலானவர்கள் அவர். திருப்பனந்தாள் தல வரலாற்றில் சொல்லப்படும் தாடகை யட்சிணி - இயக்கி என்று புராணத் தகவல்கள் சொல்கின்றன.

உலகை வசமாக்கலாம்!

இந்த உலகத்தையே கைப்பற்ற வேண்டும் என்ற உணர்வு வருவதில் தவறில்லை. நினைப்பதை உயர்வாகத்தான் நினைக்க வேண்டும். நினைப்பதை உறுதியாக நினைத்தால் நிச்சயம் ஜெயிக்கலாம். இவையெல்லாம் வள்ளுவர் காட்டும் வழிகள்.

உலகத்தை வசப்படுத்த வேண்டுமா? சாதிக்க முடியும். தகுந்த காலத்தில், தகுந்த இடத்தில் உன் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பார் வள்ளுவர்.

நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்றால் உரிய தலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான நேரத்தில் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். முறைப்படிச் செய்ய வேண்டும். நினைத்ததை நடத்தி வைக்கும் திருத்தலம் திருப்பனந்தாள்.  அதை நிறுவும் வரலாறுகள் உண்டு. காலம் அறிந்து பரிகாரம் செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

ஆற்றின் மகிமை அறிவோமே!

காவிரிப் படுகையில் உள்ள ஆறுகளில் ஒன்று மண்ணி ஆறு. சுப்பிரமணியன் எனப்படும் கந்தப்பெருமான் சேங்கனூரில் தங்கியிருந்தாராம். சூரனை அழிப்பதற்காகப் படையெடுத்துச் செல்லும் போது பாடி வீடு அமைத்த இடம் அது. சேய் (குழந்தை) ஆன முருகன் தங்கியிருந்த நல்ல ஊர் என்ற பொருளில் சேய்ஞ்ஞலூர் என்ற பெயர் அந்த இடத்துக்கு அமைந்தது. காலப்போக்கில் சேங்கனூர் என்று ஆயிற்று.

சேங்கனூரில் முகாமிட்டிருந்தவர்களுக்கு நன்னீர் தேவைப்பட்டது. சுப்பிரமணியர் ஒரு ஆற்றினை உருவாக்கினார். அந்த ஆறே மண்ணி ஆறு என்பது கந்தபுராணத்தில் உள்ள தகவல். சுப்பிரமணிய ஆறே மண்ணி ஆறு ஆயிற்று.

மண்ணி ஆறுக்கு வேறு ஒருவகையான பெயர்க் காரணமும் சொல்லலாம். மண்ணுதல் என்றால் கழுவுதல் என்று பொருள். பக்தர்களுடைய புற அழுக்கையும், அக அழுக்கையும் கழுவி அகற்றும் புண்ணிய தீர்த்தம் அந்த ஆறு. எனவே அதை மண்ணியாறு என்றார்கள்.

இதுவல்லவா ஈடுபாடு!

முன்னாளில் வாழ்ந்தவர்கள் தெய்வ வரலாறுகளில் திளைத்திருந்தார்கள். இறை அடியவர்களிடம் ஈடுபாடு காட்டினார்கள். இந்தக் காலம் போல முகேஷ், சுரேஷ் என்றெல்லாம் பெயர் வைக்காமல் இறைநெறியில் ஈடுபட்ட ஆத்மார்த்தத்தை அறிவிக்கும் வகையில் பெயர் வைத்தார்கள். திருப்பனந்தாளில் குங்கிலியக்கலயர் திருத்தொண்டில் ஈடுபட்டார் ஒருவர். தன் பெயரைக் குங்கிலியக்கலயன் என்று வைத்துக் கொண்டார். வேறுபாடு தெரிவதற்காகத் திருப்பனந்தாள் குங்கிலியகலயன் எனத் தன்னைக் குறித்துக் கொண்டார். திருப்பனந்தாளில் குங்கிலியக்கலயருக்கு சிறு கோயில் கட்டி வழிபாடு செய்வித்தார். இதனைக் குறிப்பிடும் கல்வெட்டுக் கடவூர் குங்கிலியக்கலயநாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்புச் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்தில் இல்லை.

பாவங்கள் போக்கும் பனசை!

பாவ நீக்கத் தலங்களில் பனசைக்கெனத் தனி இடம் உண்டு என்பதைத் திருப்பனந்தாள் தல புராணத்தைப் படிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது. மனிதருள் பலர் காமத்துக்கு அதிகம் இடம் தருகிறார்கள். காமுகர்களிடம் நியாயம் என்பது இருக்க வாய்ப்பில்லை. மனைவியாக இருந்தாலும் கூடச் சிலநாட்கள் உறவு கொள்ளத் தகாதவை என்று நூல்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. ஐந்து, இரண்டு, ஏழு, எட்டு, ஆறாவது ஏகாதசி திதி நாட்கள் மற்றும் திருவோணம், ஆதிரை முதலான சில நட்சத்திரங்கள், மாதப்பிறப்பு நாட்கள், வியதீபாத நாட்கள் ஆகியவை உறவு கொள்ளக் கூடாத நாட்கள். இத்தகைய நாட்களில் மனைவியுடன் உறவு கொண்டால்கூட பாவம்தான் விளையும் என்பது புராணம்.

மாற்றான் மனைவியை விரும்புதல், வேசியருடன் தொடர்பு கொள்ளுதல், பேதைகளைப் புணர்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நரகமே நிச்சயம்.

பெருந்தவ முனிவரின் மனைவியை விழைந்தவன் படும்பாட்டைச் சொல்லவும் வேண்டுமா? இந்தப் பழியும் விருத்திராசுரனைக் கொன்றதால் வந்த தோஷமும் நீங்க இந்திரன் திருப்பனந்தாள் வந்தான். செஞ்சடையப்பரை வணங்கினான். அகலியையைத் தழுவியதால் விளைந்த பாவத்திலிருந்தும், கொலைப்பழியிலிருந்தும் மீண்டான் என்கிறது திருப்பனந்தாள் புராணம்.

பாதகங்கள் போக்கும் பனந்தாள்!

நாரணன் என்றால் நாராயணன். மகாவிஷ்ணு. அவர் உலகத்தை காத்தல் தொழிலைச் செய்து வந்தவர். இருந்தாலும் கூடச் சில நேரங்களில் தன் நிலை இழந்ததை வரலாறுகள் சொல்கின்றன. பிருந்தை என்னும் பெண்ணின் மேல் பெருங்காதல் கொண்டான் திருமால். உன்மத்தம் பிடித்து அலைந்தான். அவள் இறந்தபின் சாம்பலில் விழுந்து ‘ஹே பிருந்தா’ என்றெல்லாம் புலம்பினான். இப்படி மாற்றான் மனைவி மேல் மையல் கொண்ட வரலாறு திருமாலுக்குப் பெரும் சாபம் விளைவித்த பழி. இந்தச் சாபம் நீங்கிய இடம் திருப்பனந்தாள்.

அப்போது விஷ்ணு சிவனிடம் வேண்டினான். அதன்படி பஞ்சமாபாதகங்களைச் செய்த பாதகர்களுக்கும் வஞ்ச நெஞ்சத்தினால் மாற்றான் மனைவியை நினைப்பவர்கள் மற்றும் அனுபவிப்பர்களுக்கும் ஏற்படும் எல்லா வகையான பாவங்களையும் பொய்கைக் குளத்தில் மூழ்கித் தன்னை வணங்குபவர்களுக்கு நீக்குவேன் மற்றும் உயர்ந்த கதி தருவேன் என்று சிவன் அருளினார் என்கிறது திருப்பனந்தாள் புராணத்தில் ஏழாவது சருக்கத்தில் உள்ள பதிமூன்றாவது பாடல்.

எல்லா பாதகங்களையும் விலக்கும் தலம் தான் திருப்பனந்தாள்.

தரிசிக்க வேண்டிய திருக்கல்யாணம்!

பொய் சொன்னதால் ஏற்பட்ட சாபத்திலிருந்தும், மெலிவிலிருந்தும் மீண்ட பிரம்மதேவன் திருப்பனந்தாளில் சித்திரை மாதத்தில் அருணஜடேஸ்வரருக்குத் திருவிழா எடுத்தான். ஊரை அழகாக அலங்கரித்தான். எல்லா வகையான வாகனங்களிலும் விசேஷமாகச் சுவாமியைப் புறப்படச் செய்தான். தீர்த்தவாரித் திருவிழா நடத்தினான் என்பது புராணத் தகவல்.

திருவிழாக்களில் பொதுவாக ஐந்தாம் நாள், ஏழாம் நாள், தேர்த் திருவிழா மற்றும் தீர்த்தவாரி திருவிழாக்களை விசேஷமாகத் தரிசனம் செய்தல் வேண்டும். திருப்பனந்தாளில் இரண்டு விழாக்கள் மிகவும் விசேஷம். சுவாமி அம்பாளுக்கு ஞானோபதேசம் செய்யும் நிகழ்ச்சி பங்குனி உத்திரத்தில் ஐதிக விழாவாக நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி நாகதோஷ நிவர்த்தித் தலமும் குருவாக இறைவன் இருக்கும் தலமுமான திருப்பனந்தாளில் திருக்கல்யாணத் திருவிழாவும் மிகவும் விசேஷம்.

ஏனைய மதங்கள் இல்லறத்தை மோட்ச சாதனமாகக் கருதாத காலகட்டத்தில் இல்லறத்தை நல்லறம் என்று அறிவித்த மார்க்கம் சைவ சமயமாகும். ஒருவனும், ஒருத்தியும் வாழ்வாங்கு வாழ்வதை அங்கீகரித்த சமயம் இது.

இறைவனுக்குத் திருக்கல்யாணம் செய்வது கூட இந்தத் தத்துவத்தைக் காட்டக் கூடியதேதாகும்.

திருக்கல்யாணக் கோலம் கல்யாணசுந்தர கோலம் எனப்படும். திருக்கல்யாணத்தைத் தரிசித்தால் திருமணம் ஆகாதவதற்குத் திருமணம் ஆகும் என்பதில் ஐயமில்லை.

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயிலில் பிரம்மதேவன் முதலில் உற்சவம் செய்தான். பின்னர்த் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் அருளால் திருமணம் கைவரப்பெற்ற நாககன்னி திருப்பனந்தாளில் பல திருப்பணிகளைச் செய்தாள். பல்வேறு மண்டபங்களையும் கோபுரங்களையும் வலிமை பெறுமாறு புதுப்பித்தாள்; சில பகுதிகளைப் புதிதாகக் கட்டினாள்.

அத்துடன் அமையாமல் சித்திரை மாதத்தில் பஞ்சமியில் கொடியேற்றி நடைபெறும் பெருவிழாவைச் சிறப்பாக நடத்தினாள். இந்திர விமானம், ரிஷப வாகனம் மற்றும் தேர்த்திருவிழாவைச் சிறப்பாக நடத்தினாள்.


‘திண்ணிதாகிய சித்திரை மதிமுதல் பக்கத்து
எண்ணு பஞ்சமியில் கொடியேற்றி நாள்தோறும்
மண்ணு மிந்திர விமானமும் கயிலையும் விடையும்
நண்ணு தேர்களும் இயங் கிடத் திருவிழா நடத்தி’

- என்பது புராணப் பாடல்.

 ஆதிசேடன் என்கிற நாகராஜனும், நாககன்னியும் தோஷ நீக்கம் பெற்ற தலம்  திருப்பனந்தாள். இத்தலத்தில் திருக்கல்யாண விழா நடத்தினாள் நாககன்னி.

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் திருக்கல்யாண விழாவைத் தரிசித்தல் - பங்கேற்றல் புண்ணியப் பலனைத் தரக்கூடியதாகும்.

 ⇭⇭⇭