பனசையின் பெருமைகள் - கல்யாணத் தடை அகல

பாவங்களையும், தோஷங்களையும் 
போக்கும் செஞ்சடையப்பர்

பல்வேறு பாவங்களை நீக்கும் திருத்தலம் திருப்பனந்தாள். செஞ்சடையப்பர் பாவங்களை நீக்குவது மட்டுமல்லாமல் நாகதோஷங்களையும் நீக்கக் கூடியவர் என்பதைத் திருப்பனந்தாள் புராணம் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

நாகத்துக்கே தோஷம்
நாகராஜன் பூஜித்த தலங்கள்

நாகராஜன் பூஜித்த தலங்கள் என்று நான்கு தலங்களைச் சொல்வார்கள்.

ஒரு சிவராத்திரி நாளில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், நாகூர் என்ற நான்கு தலங்களில் நான்கு காலங்களில் நாகராஜன் வழிபட்ட செய்தி புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பல வகை நாகதோஷங்கள்

நாகதோஷங்களில் பல வகைகள் உண்டு. ராகு கேதுவால் வரும் தோஷங்கள், கால சர்ப்ப தோஷங்கள் முதலானவை அவை. இந்த எல்லா வகையான நாகதோஷங்களையும் நீக்கும் ஆற்றல் அருணஜடேஸ்வரருக்கு உண்டு. நாகதோஷம் இருந்தால் திருமணத் தடைகள் நேரலாம். புத்திர பாக்கியம் தள்ளிப் போகலாம். தன்னுடைய சொத்தே தன் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம். தன் கைப்பொருள் தனக்குப் பயன்படாமல் இருக்கலாம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் நழுவலாம். இந்த எல்லா வகையான தொல்லைகளிலிருந்தும் நீங்க வேண்டுமென்றால் நாகதோஷத்திலிருந்து நிவர்த்தியடைய வேண்டும். அதற்குரிய பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.

நாகதோஷ பரிகாரம்

நாக தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற தலம் திருப்பனந்தாள் என்பதைத் திருப்பனந்தாள் புராணத்தில் உள்ள இரண்டு வரலாறுகள் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.

நாகத்துக்கே தோஷம்

பொதுவாக நாகத்தால் பிறருக்குத் தோஷம் வரும். அந்த நாகத்துக்கே தோஷம் வந்தால் அது எங்கே போகும்? இந்தக் கேள்விக்கு விடை சொல்கிறது பனசைப் புராணம்.

பாரம் தாங்காமல் தவித்த நாகராஜனான ஆதிசேடனும், மணம் ஆகாமல் இருந்த நாக கன்னிகையும் பரிகாரம் பெற்ற தலம் திருப்பனந்தாள் என்கிறது புராணம்.

ஒரு நாளில் ஒரே ஒரு வேளை நாகராஜன் பூஜை செய்த தலம் திருநாகேஸ்வரம். பல நாட்கள், பல வருடங்கள் நாகராஜன் பூஜை செய்த தலம் திருப்பனந்தாள். இது திருப்பனந்தாளின் பெருமையைக் காட்டக்கூடியது.

வாசுகி வழிபாடாற்றிய தலம் கீழப்பெரும்பள்ளம். அவன் மகள் நாககன்னி பல ஆண்டுகள் வழிபாடாற்றிய தலம் திருப்பனந்தாள். ராகு கேது பரிகாரத் தலங்களைக் காட்டிலும் பல மடங்கு பெருமை வாய்ந்தது என்பதை இந்த வரலாறுகள் புலப்படுத்துகின்றன.

வாயு பகவானுடன் போட்டி போடும் அளவுக்கு வலிமையில் சிறந்து நின்றவன் ஆதிசேஷன். அவன் நாகங்களுக்கெல்லாம் அரசன். நாக நன்னாட்டினைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்தவன்.

தர்மதேவதைக்கு ஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொரு காலாகக் குறையுமாம். கிரேத யுகத்தில் நான்கு கால்கள். திரேத யுகத்தில் மூன்று கால்கள். துவாபர யுகத்தில் இரண்டு கால்கள். கலியுகத்தில் ஒரு கால் அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டேயிருக்கும். அதனால் பூமியில் தர்மம் குறைந்தது; பாவம் மிகுந்தது; அரசர்கள் மனுமுறை தவறினர். வரிவசூலில் தீவிரம் காட்டினர். அறிவில்லாதவர்கள் அமைச்சனானார்கள். கந்துவட்டி கொடி கட்டிப் பறந்தது. இரக்கம் முற்றிலும் அழிந்தது. அடுத்தவருக்கு இடைஞ்சல் செய்வது சாதாரணமானது. மனைவி பொய்மையாக வாழலானாள்.

கலியின் தாண்டவம் உலகெல்லாம் இருந்தது. பசு, வைதிகர், பெண்கள், குழந்தைகளை வதைப்பது அதிகரித்தது. பொய்யும், பித்தலாட்டமும் மிகுந்தன. நண்பர்களுக்கு நட்பில் வஞ்சனை புகுந்தது. நடுநிலை அழிந்தது. தர்மத்தை இகழ்ந்தார்கள். ஞான நூல்களை மறந்தார்கள். கற்றபடி நடக்கவில்லை; குருத் துரோகம் செய்தார்கள். விருந்திருக்கத் தாம் உண்டார்கள், அறத்தைப் பழித்தார்கள், புகழை அவமதித்தார்கள், வாங்கிய பொருளைத் திருப்பிக் கொடுக்கவில்லை; சுற்றத்தை ஒதுக்கினார்கள்.

இப்படி எல்லா வகைகளிலும் தர்மம் மறந்து அதர்மத்தையே பின்பற்றியதால் பூமியில் பாவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பாவம் மிகுந்ததால் பூமியின் பாரமும் மிகுந்தது. அதை எப்படிச் சுமப்பது? என்று தெரியாமல் தவித்தான் ஆதிசேஷன் என்னும் நாகராஜன். பூபாரத்தைச் சுமக்க இன்னும் ஆற்றல் வேண்டும் என்று எண்ணினான். எங்குச் சென்று வழிபட்டால் அந்த ஆற்றல் கிடைக்கும் என்று அவன் தவித்திருந்த நேரத்தில் திருப்பனந்தாளுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டான்.

ஆதிசேஷன் திருப்பனந்தாளுக்குச் சென்றான். முன்னொரு காலத்தில் பிரம்மாவுக்கு அருள்செய்த பரம்பொருளை அடைந்தான். பொய்கைக் குளத்தில் நீராடி,னான். வெண்ணீறு தரித்தான். உமையுடன் வேதியனைத் துதித்தான். ‘மன்றுளாடிய பராபர வள்ளலே போற்றி’ என்றெல்லாம் அர்ச்சித்தான்.

ஆதிசேஷனுடைய வழிபாட்டால் மகிழ்ந்தார் சிவபெருமான். அவன்முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். ஆதிசேஷன் செஞ்சடையப்பரை நோக்கி, "இறைவா! என்னால் பூமியின் சுமையைத் தாங்க முடியவில்லை. அந்தச் சுமையை எளிமையாகச் சுமக்கும் ஆற்றல் எனக்குத் தரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.

இறைவனே அவ்வாறே செய்வதாக அருளினார். ஆதிசேஷன் வேண்டிக் கொண்டபடி பாதகனாக இருந்தாலும் தன்னை வழிபட்டவருக்கு எல்லா நலன்களையும் தருவதாக வாக்குத் தந்தார் சிவபெருமான் என்பது புராணம். ஊருக்கெல்லாம் தோஷம் தரும் நாகராஜனுக்குப் பிரச்னை வந்தபோது அதைத் தீர்த்த திருத்தலம் திருப்பனந்தாள். அந்த மூர்த்தி திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர்.

நாகராஜனின் மகளுக்கு திருமணப் பிரச்சனை

நாகராஜனுக்கு மட்டுமல்ல நாகராஜனுடைய மகளுக்கும் ஒரு காலகட்டத்தில் திருமணம் தொடர்பான பிரச்னை வந்தது. அதை அருணஜடேஸ்வரர் அருள்செய்து தீர்த்த விவரத்தைத் தல புராணத்தில் உள்ள பதினோறாவது சருக்கம் விளக்குகிறது.

நாகலோகத்தில் எட்டு நாகங்கள் உண்டு. பணவன், நந்தன், வாசுகி, கார்கோடகன், பத்மன், ரட்சகன், குளிகன், சங்கன், பத்மன் என்பன அந்த நாகங்கள். நாகராஜாக்களில் ஒருவனான வாசுகி பெற்றெடுத்த பெண் சுமதி.

அவள் அழகில் சிறந்த ஆரணங்கு. கோடு கொண்டு எழுந்து விம்மிய குங்குமச்சாந்து தடவப் பெற்ற நகில்களை உடையவள். வாடிய இடுப்பினை உடையவள். பீடு மிகப்பெற்றவள்.

நாகராஜனின் மகள் சுமதிக்கு திருமணப் பருவம்

அப்படிப்பட்ட நாககன்னிகைக்குத் திருமணப்பருவம் வந்தது. அவளை மணம்முடிக்க வந்தார்கள் அழகிய அரசர்கள் பலர். ஆனால் அந்த நிலையில் அவள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஞானம் பெறவேண்டும் என்று நினைத்தாள். மணம்செய்து கொள்ளச் சொன்ன தந்தையிடம் ‘திருமணம் வேண்டாம்’ என்று மறுத்தாள். அப்போது அவன், "பெண்ணே நீ மடமையாகப் பேசுகிறாய். உலக இயற்கைக்கு மாறாக வாழ்வது நியாயமல்ல. உமாதேவிகூட இல்லறம் செய்துதான் உயர்வு பெற்றாள்" என்றெல்லாம் எடுத்துரைத்தான்.

நாககன்னி சுமதியின் கனவில் சிவபெருமான்

தந்தையிடம் வாதித்த பின் அவள் உறங்கச் சென்றாள். ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காண்டாள். மறுநாள் காலை தந்தையிடம் சென்றாள். "அப்பா நான் நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். நங்கையே நின் பூசையால் மகிழ்ந்தோம். பூலோகத்தில் பனசை என்ற ஓர் இடம் இருக்கிறது.அங்குச் சென்று பூஜைகளை செய்க என்று சிவபெருமான் சொன்னார்" எனத் தெரிவித்தாள் அவள்.

உடனே, வாசுகியான நாகராஜன் பூலோகத்துக்குச் செல்லும் வழியைக் காட்டினான். தோழியர்கள் துணைவியர்களுடன் நாக கன்னிகையை அனுப்பி வைத்தான்.

திருப்பனந்தாள் சென்ற நாககன்னி சுமதி



பூலோகத்தை அடைந்தாள் நாககன்னி. திருப்பனந்தாளை அடைந்தாள். தல மகாத்மியங்களைத் தெரிந்து கொண்டாள். புண்ணிய தீர்த்தங்களில் நீராடினாள். திருவெண்நீறு அணிந்தாள். உருத்திராட்சம் பூண்டாள். இடைவிடாமல் பூஜைகளைச் செய்யலானாள். அன்பு மிகுதி காரணமாகப் பூஜைகளைச் செய்து வரும் நாளில்...

திருப்பனந்தாளில் அரித்துவசன் என்ற மன்னன்

வடநாட்டு அரசன் ஒருவன் தென்னாட்டுத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்தான். அவன் திருநாகேஸ்வரம் முதலான தலங்களைத் தரிசிக்கும் காலத்தில் அகத்திய முனிவர் அங்குச் சென்றார். அகத்திய முனிவரைக் கண்டவுடன் மன்னன் வணங்கினான். அவனைப் பார்த்த முனிவர், "மன்னவனே அறம் பொருள், இன்பம், வீடு என்கிற நால்வகை பயன்களும் வேண்டும் என்று நினைக்கிறாய்; வேண்டியதெல்லாம் கொடுக்கக் கூடிய தலம் ஒன்று உண்டு; திருப்பனந்தாள் என்பது அதன் பெயர்; அந்தத் தலத்தைத் தரிசிப்பாயாகுக" என்றார். அரசனும் அவ்வாறே செய்ய எண்ணித் திருப்பனந்தாளை நோக்கிச் செல்லலானான்.

வாசுகியின் மகளாகிய சுமதி என்ற நாககன்னி மூன்றாவது ஆண்டாகச் செஞ்சடையப்பரை வழிபாடு செய்து கொண்டிருந்த நேரம்... அப்போது திருப்பனந்தாளுக்கு வந்தான் மன்னன்.

மன்னனும், நாககன்னியும் காதல்

மன்னனும், நாககன்னியும் செஞ்சடையப்பரை வழிபட்டனர். அரசியின் அழகு கண்டு வியந்தான் அரசன். நெருங்கிய சுற்றத்தவர் ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்தனர். அரித்துவசன் என்பது அரசனின் பெயர் என்பதை அறிந்தாள் நாககன்னிகை. வாசுகியின் மகள் சுமதி என்ற நாககன்னிகை என்பதையும், அவள் மூன்று வருடமாய் அருணஜடேஸ்வரரை வழிபடுவதையும் அறிந்தான் அரசன்.

அந்த நிலையில் மனம் மகிழ்ந்த நாககன்னி அரித்துவசன் மீது அன்பு கொண்டாள்.

நாகலோகத்தில் நாகன்னிக்குத் திருமணம்

நாககன்னி, மன்னனை  உடன் அழைத்துக் கொண்டு நாகலோகத்துக்குச் சென்றாள். தன் தகப்பனிடம் தன் விருப்பத்தைச் சொன்னாள்.

மகிழ்ந்தான் தகப்பன். திருமணத்துக்கு நாள் குறித்தான். மிகச்சிறந்த முறையில் வைதிக முறைப்படித் திருமணம் நடந்தது. பதுமராகம் முதலிய பல மணிகளும், விலைமதிப்பற்ற கிரீடங்களும் அழகிய குளிகைகளும் மருகனுக்குத் தந்து மகிழ்ந்தாள் வாசுகி. பல்வேறு பரிசுகளைத் தன் மகளுக்கும் கொடுத்தார்.

கணவனும், மனைவியுமாக திருப்பனந்தாளில் நாகன்னியும், மன்னனும்

மணம் முடிந்தபின் கணவனும் மனைவியுமாகத் திருப்பனந்தாளுக்கு வந்தார்கள்; அங்கே பல்வேறு திருப்பணிகளைச் செய்தார்கள். நாககன்னிகை தன் கணவனோடு அர்ச்சனை செய்தாள். நாகன்னிகை தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினாள். பெரும் திருவிழாவினை எடுத்தாள் என்று திருப்பனந்தாள் தல புராணம் சொல்கிறது.

திருமண தோஷம் நீங்கும்

விருப்பமின்றித் தள்ளிப்போனது நாககன்னி திருமணம். அது தானே கூடிவர வழிவகுத்தவர் செஞ்சடையப்பர். நாககன்னி தீர்த்தத்தில் நீராடிச் செஞ்சடையப்பரையும், பெரியநாயகியம்மையையும் வணங்கத் திருமணத் தடைகள் அகலும்; நாகதோஷங்கள் நீங்கும் என்பது தலபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள செய்தி.


பிரமோத்சவத்தில் நடைபெறும் திருக்கல்யாண மகோத்சவத்தைத் தரிசிப்பது தோஷங்களை நீக்கும்; செல்வத்தைக் கொடுக்கும்; திருமணத்தை நடத்தி வைக்கும்; புத்திர பாக்கியத்தை உண்டாக்கும். திருக்கல்யாண கோலத்தில் இறைவனை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும்.

⇭⇭⇭