காசி மடம்

குமர குருபரர் - சிற்றிலக்கிய வேந்தர். செந்தில் கந்தன் திருவருளால் ஊமை நீங்கப் பெற்றவர். எடுத்த எடுப்பிலேயே குட்டிக் கந்தபுராணம் என்று போற்றப்படக்கூடிய கந்தர் கலிவெண்பா என்ற அற்புதமான நூலை அருளிச் செய்தவர். சிவஞானம் பெறவேண்டிக் குருநாதரை தேடி யாத்திரை புறப்பட்ட நிலையில் திருத்தருமபுரம் மண்ணை மிதித்தார். மனத்திலே சிவானந்தம் பொங்கியது. ‘தருமை மண்ணை மிதித்தேன் என் சீவன் சிவனாயிற்று’ என்கிறார். ‘ஊரில் குறுகினேன் ஒரு மாத்திரை அளவு என் பேரில் குறுகினேன்’ என்று பாடியிருக்கிறார்.

அப்போது தருமபுரத்தில் அருளாட்சி செய்த குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிகர் என்பவர் ஆவார். அவரிடம் உபதேசம் பெற்றார் குமரகுருபரர். குருவின் கட்டளைப்படி குருபரர் காசி யாத்திரை புரிந்தார். காசியை அடைந்தார். அங்கேயோ ஹிந்துஸ்தானி. இவருக்கோ தமிழ் மட்டுமே தெரியும். சரஸ்வதி தேவியைப் பிரார்த்தித்தார். சகலகலாவல்லி மாலை பாடினார். ஹிந்தி பேசும் ஆற்றல் பெற்றார். பின்னர் மொகலாய மன்னன் சபைக்குச் சிங்கத்தின் மீது ஏறிச் சென்றார். அனைவரும் வியந்தனர். அரசனிடம் கங்கைக் கரையில் மடம் கட்ட இடம் தருமாறு கேட்டார். எவ்வளவு இடம் வேண்டும்? எங்கே வேண்டும்? என்றான் மன்னன். கருடன் பறக்கும் இடத்தை தனக்குத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

‘கருடன் காசியில் பறக்காது. இவரோ கருடன் வட்டமிட்டு காட்டும் பகுதியை கேட்கிறாரே’ என்று வியந்தனர் சபையினர். மறுநாள் காசியில் இடம் தருவதாகச் சொன்னான் மன்னவன். அனைவரும் கங்கை கரை நோக்கிச் சென்றனர். கருடனே பறவாத காசியில் பறந்து வந்தது கருடன். கங்கைக் கரையில் ஒரு பகுதியை வட்டமிட்டு காட்டியது. அந்த இடத்தில் குருபரர் அமைத்த மடம் குமாரசாமி மடம் எனப்படும் ஸ்ரீ காசி மடம் ஆகும்.

குருபரர் அமைத்த காசிமடம் காவிரிக் கரையில் கிளை மடம் கண்டது. திருப்பனந்தாளில் காசி மடம் பெரிய அளவில் அமைக்கப்பட்டது. நிர்வாகக் காரணங்களால் காசி மடத்து அதிபர்கள் காசியிலும், திருப்பனந்தாளிலும் இருந்தனர். தருமையாதீனத்தின் ப்ரதம சிஷ்யர்கள் இவர்கள்.
இந்த நூற்றாண்டில் பல்வேறு அறக்கட்டளைகளை அமைத்து தமிழும், சைவமும் வளர்க்கும் திருமடம் ஸ்ரீகாசிமடம். தற்போது காசி மடத்தின் அதிபராக திகழும் கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் பல்வேறு அறப்பணிகளை ஆற்றி வரும் அருளாளராகச் சைவ நல்லுலகத்தால்  ஏற்றுப் போற்றப்பட்டு வரும் துறவரசராவார்.
ஸ்ரீமத் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் 10.04.09 முதல் ஸ்ரீ காசி மடத்தின் இளவரசாக இயங்கி வருகிறார். 5.4.2010 முதல் இணை அதிபராக பொறுப்பேற்று அருளாட்சி புரிந்து வருகிறார்.

⇭⇭⇭