பனசையின் பெருமைகள் - அன்புக்காக எதையும் செய்வான்

அன்புக்கும், பக்திக்கும் மயங்கும் அருணஜடேஸ்வரர்


கடவுள் கண்ணால் காணப்படுபவன் அல்லன். வார்த்தைகளால் வர்ணித்து விடவும் முடியாது; கைகளால் தொட்டு அறியவும் முடியாது. அவன் மனம், மொழி, மெய் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறான். அதனால்தான் அவனை மனவாசகம் கடந்தான் என்கிறார்கள். கடவுள் என்ற சொல் உணர்த்தும் தத்துவமும் இதுதான்.

அவன் அருமையானவன். ஆனால் அதேநேரத்தில் எளிமையானவனும் கூட. மாணிக்கவாசகர் மகேஸ்வரனை வர்ணிக்கும் போது ‘அருமையில் எளிய அழகன் காண்க’ என்பார். முப்பத்து முக்கோடித் தேவர்களாலும் அறியப்படாத அருமை படைத்தவனான அரன் தன் பக்தர்களுக்காக இரங்கி வருகிறான். மாலொடு நான்முகனும் தேடி அறிய முடியாத அந்த தெய்வம் பக்தர்களைத் தேடி வருகிறது.

பரமேஸ்வரன் ஏழை பங்காளன். அவனை நோக்கிப் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்களை நோக்கி ஆண்டவன் நூறடிகளை எடுத்து வைத்து வருகிறான். ஓடோடி வருகிறான். அவர் துன்பத்தைத் துடைக்கிறான். எண்ணங்களை ஈடேற்றுகிறான் என்பதை உணர்த்தும் புராண வரலாறுகள் பல உண்டு. திருப்பனந்தாள் திருத்தலத்தில் நடந்த நிகழ்வுகள் சிவபெருமான் பக்தர்களுக்காக அவர் மனவருத்தம் தீர்ப்பதற்காக எதையும் செய்வான்; வளைந்தும் கொடுப்பான்; நிமிர்ந்தும் நிற்பான் என்பதை உணர்த்தக் கூடியவை.

மண்ணி நதிக்கரையோரம் உள்ள புண்ணியத் தலம் திருப்பனந்தாள். தீர்த்தம் மண்ணி ஆறு. மூர்த்தி அருணஜடேஸ்வரர். ஒரு தலத்துக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் விசேஷம். இந்த மூன்றும் இருந்தால் சத்குருவின் அருள் கிடைப்பது நிச்சயம். குருவருள் கிடைத்தால் குருதோஷங்கள் பஞ்சாய்ப் பறக்கும்.

தாடகையின் அன்பு




அருணஜடேஸ்வரர் யுக யுகாந்திரமாக இருக்கும் சுயம்புநாதர். அவரைப் புராண காலத்தில் பூஜித்தாள் ஒரு பூவை. அவள் அச்சம்,  மடம், நாணம், பயிர்ப்பு என்ற உத்தம குணங்களுக்குச் சொந்தக்காரி. சிவபூஜையில் நாட்டம் அதிகம் கொண்ட நங்கை. அவள் தினந்தோறும் சிவலிங்கத்தை பூஜிப்பது பழக்கம். வெவ்வேறு இடங்களிலிருந்து மலர்களைக் கொண்டு வருவாள். சிவலிங்கம் இருக்கும் கோயிலைத் தூய்மை செய்வாள். இறைவனை முறைப்படிப் பூஜை செய்வாள். எல்லா வகையான உபசாரங்களையும் செய்வாள். இறைவனுக்குச் செய்யும் உபசாரங்களில் மலர்மாலை சாத்துதல் என்பது ஒன்று.

ஒருநாள்... சுவாமிக்கு மாலை சாத்தப் போகும் நேரம்... அவள் மேலாடை சற்று நழுவியது. உடல் உறுப்புக்கள் தெரியச் சுவாமிக்கு மாலை சாத்துவது அபசாரம். எனவே அவள் நாணமிக்கவளாய் நழுவிய மேலாடையை ஒரு கையால் இறுக்கிப் பிடித்து மாலை சாத்த முயன்றாள். பக்கவாட்டில் ஆடையைப் பிடித்தமையால் கையின் நீளம் குறைந்தது. லிங்கம் கைக்கு எட்டவில்லை. மாலை சாத்த முடியவில்லை. அந்த நிலையில் சிவபெருமான் தாடகையின் பக்திக்கு இரங்கித் தன் பாணப்பகுதியைச் சற்றே முன்னோக்கி குனிந்தார். அதனால் மாலை சாத்த முடிந்தது. தாடகையும் மாலை சாத்தி மகிழ்ந்தாள்.

சிவபெருமான் தன் பக்திக்கு இரங்கிச் சற்றுச் சாய்ந்தது அவளுக்கு ஒரு பக்கத்தில் சந்தோஷத்தையும், இன்னொரு பக்கத்தில் வருத்தத்தையும் கொடுத்தது. இனி ஒருமுறை அவர் அப்படிச் சாய வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்று நினைத்தாள். சிவபெருமானுக்குத் துன்பம் தரக்கூடாது என்று எண்ணினாள் அவள். எனவே கடும்தவம் இருந்தாள். பூஜாகாலத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கப் பதினாறு கைகளைச் சிவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டாள் என்பது திருப்பனந்தாள் தலவரலாறு.

தாடகைக்காகத் திருப்பனந்தாளில் சிவலிங்கம் வளைந்த வரலாறு சோழ நாட்டில் பரவியது. அப்போது சோழர் அரண்மனை கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பழையாறையில் இருந்தது. நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டான் மன்னன். துடிதுடித்தான்.

யானை, குதிரை, காலாள் படைகள் புடைசூழத் திருப்பனந்தாளுக்கு வந்தான். லிங்கத்தின் வளைவை நிமிர்த்துவதற்காகப் பாணத்தின் மேல் கயிறு கட்டினான். யானை, குதிரை மற்றும் வீரர்களை வைத்து நிமிர்த்த முயன்றான். சிவபெருமான் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை. ஆட்சி அதிகாரத்துக்கு அடிபணிந்து விடுவாரா ஆண்டவன்? மாட்டாரல்லவா. தோல்வியைத் தழுவினான் மன்னன். துவண்டு திரும்பினான்.

தாடகையின் அன்புக்காக வளைந்தார் அருணஜடேஸ்வரர். ஆனால் அவர் அரசனின் அதிகாரத்துக்கு அடிபணியவில்லை என்ற செய்தி நாடெல்லாம் பரவியது. அந்தச் சமயத்தில்...

குங்கிலியக்கலய நாயனாரின் பக்தி



காலசம்ஹார க்ஷேத்திரமான திருக்கடையூரில் சிவத்தொண்டு புரிந்து வந்தார் ஒரு அடியவர். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயரென்னவோ? உலகுக்கு அது புலப்படவில்லை. அவர் தினந்தோறும் திருக்கடையூர் சிவாலயத்தில் குங்கிலியப்புகையிடும் சிவத்தொண்டு செய்து வந்தார். இடைவிடாமல் செய்த அத்தொண்டு காரணமாக அவரை எல்லாரும் குங்கிலியக்கலயநாயனார் என்று அழைத்தார்கள். இயற்பெயர் போனது காரணப் பெயரே நிலைத்தது.

திருப்பனந்தாளில் நடந்த நிகழ்வுகளை அறிந்தார் குங்கிலியக்கலய நாயனார். திருப்பனந்தாளுக்குச் சென்று லிங்கத்தை நிமிர்த்த வேண்டும் என்று முடிவெடுத்தார். நினைத்ததைச் செயல்படுத்தத் திருப்பனந்தாள் நோக்கிப் புறப்பட்டார். கோயிலை அடைந்தார். குங்கிலியத் திருப்பணி செய்தார். அதன்பின் அவர் வளைந்திருந்த லிங்கத்திடம் சென்றார். இறைவனை மனதாரத் தொழுதார். ‘அன்புக்கு வணங்கிய அரனே என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்’ என்று பிரார்த்தித்தார்.

நாரினால் கெட்டியாகக் கட்டப்பட்ட ஒரு மாலையை சிவனுக்கு அணிவித்தார். வளைந்திருந்த பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் நின்று கொண்டார். தன் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டார். அந்தக் கயிற்றினை லிங்கத்துடன் கட்டினார். லிங்கத்தை நிமிர்த்த முயன்றார்.

சர்வேஸ்வரனுக்குச் சங்கடத்தைக் கொடுத்து விட்டார் சிவனடியார். அரசனின் அதிகாரத்துக்கு வளையாத சிவனுக்குச் சவாலாக அமைந்தார் அடியவர். நிமிராவிட்டால் குங்கிலியக்கலய நாயனாருக்குச் சாவு நிச்சயம். சுருக்கு இறுகும் அவர் உறுதியாக உயிர் நீப்பார். அவருடைய அன்பு சிவனை அசைபோட வைத்தது. அடியவருக்காக - அவர் அன்புக்காக - அவர் மனஒருமைப்பாட்டுக்காக மகிழ்ச்சியடைந்தார். லேசாக நிமிர்ந்தார். இதைச் சேக்கிழார் மிக அழகாகச் சொல்வார்.

 நண்ணிய ஒருமை அன்பின் நார் உறு  பாசத்தாலே

திண்ணிய தொண்டர் கூடி இளைத்த  பின் திறம்பி நிற்க

ஒண்ணுமோ கலயனார்தம் ஒருப்பாடு  கண்டபோதே

அண்ணலார் நேரே நின்றார் அமரரும்  விசும்பில் ஆர்த்தார்

- என்பது பெரிய புராணம்.

திருப்பனந்தாள் சிவபெருமான் பக்திக்காக வளைந்து கொடுத்தார் - ஆட்சி அதிகாரத்துக்கு அடிபணிய மறுத்தார் - அடியவர் அன்புக்கு இரங்கினார் நிமிர்ந்து கொடுத்தார் என்பது தல வரலாறு.

அன்புக்காக எதையும் செய்வார் அருணஜடேஸ்வரர். அடியவர்களுக்கு உதவுவார் என்பதை உணர்த்தும் வரலாறு இது.

இன்றும் செஞ்சடையப்பர் திருவுருவில் சற்று வளைந்து முன்னோக்கிய நிலையுடைய பாணம் அமைந்திருக்கிறது. உள்ளன்போடு வழிபட்டுக் கேட்டதைப் பெற வேண்டிய தலம் இது.

⇭⇭⇭