பனசையின் பெருமைகள் - ஐராவதம்:யானை ஏறா மாடக்கோயில்


ஐராவத சருக்கம்

செஞ்சடை வேதிய தேசிகர் எழுதிய திருப்பனந்தாள் புராணத்தில் மூன்றாவதாக அமைகிறது ஐராவத சருக்கம். இது ஐம்பது பாடல் களால் ஆனது.

வெள்ளை யானைக்கும், கருப்பு யானைக்கும் காதல்

இந்திரன் ஏறும் யானை ஐராவதம். வெள்ளை நிறத்தில் இருக்கும் யானை இது. ஐராவதத்துக்குப் பூலோகத்தில் இருக்கும் கருநிற யானை ஒன்றின் மீது காதல். அடிக்கடித் தேவலோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்துவிடும்.

ஒருசமயம் ஐராவதம் பூலோகத்துக்கு வந்திருந்த போது இந்திரன் திடீரெனப் போரிட வேண்டியதாயிற்று. அப்போது அவன் ஐராவதத்தை உடனே அழைத்து வருக என்று ஏவலர்களுக்குக் கட்டளையிட்டான். தேவலோகத்தில் யானையைத் தேடினார்கள் அவர்கள். யானை அங்கு இல்லை. யானை இல்லை என்ற விவரத்தை இந்திரனிடம் சொன்னார்கள்.


வெள்ளை யானைக்கு இந்திரனின்  இட்ட சாபம்

வெள்ளானை பூலோகத்துக்குச் சென்றிருப்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த இந்திரன் வெள்ளை நிறத்தில் இருக்கும் யானை பூலோகத்து யானையைப் போலக் கருநிறத்தை அடையட்டும் என்று சபித்தான்.

ஐராவதத்திற்கு சாபம் பலித்தது

அந்தச் சாபம் சிலநாட்களில் பலித்தது. வெள்ளானையான ஐராவதம் கருத்துப் போனது. அழகு அழிந்தது. உயர்ந்த உணர்வுகள் அழிந்து போயின. அதனால் யானை கவலையும், நடுக்கமும் அடைந்தது. அளவில்லாத துன்பம் அடைந்தது.

கயிலையில் முனிவரின் உதவி

பின்னர் ஒருவாறு தேறித் தன்னுடைய துன்பம் நீங்குவதற்காகக் கயிலைக்குச் சென்றது. அங்கு ஒரு முனிவர் வழிகாட்டினார். "யானையே! உன் சாபத்தைத் தொலைக்கக் கூடியதும், தேவர்கள் வணங்கக்கூடியதுமான 108 சிவத்தலங்கள் உண்டு. அவற்றுள் மிகவும் முக்கியமானவையாகப் பதினெட்டுத் தலங்களைச் சொல்லலாம். அந்தப் பதினெட்டிலும் மூன்று, வானவர்களுக்கு அருள் செய்யக்கூடிய பெருமைபடைத்த தலங்கள். அவை திருப்பனந்தாள், மதுரை, கோகர்ணம் என்பவையாகும்.

 தானமாமலை தந்திகேள்! சாபமுன் தொலைக்கும்
வானநாயகர் மகிழ்தலம் நூற்றெட்டு வளமைத்
தானமாமறு பதினெட்டு தக்க மூன்று அவைதாம்
வானவர்கருள் பனசை மாமதுரை கோகரணம்

-  என்பது புராணப் பாடல்.

"பனசை (திருப்பனந்தாள்), மதுரை, கோகர்ணம் ஆகிய மூன்று தலங்களிலும் தேவதேவனான சிவபெருமான் சுயம்புவாய்த் தோன்றிக் கோயில் கொண்டிருக்கிறார். இந்த மூன்று தலங்களில் பனசை மிகவும் உயர்வான தலமாகும். பொன்னி நதியின் கரையில் இருக்கிறது. கோயில் மேற்குப் பார்த்து இருக்கிறது. சுப்பிரமணியரால் உருவாக்கப்பட்ட மண்ணியாறு உத்தரவாகினியாய் இருக்கிறது. அதுமட்டுமல்ல. பராபரையான சக்தி, தான் அருளிய ஞானமொழிகளைக் கேட்கச் சிவபெருமான் இருக்கக் கூடிய தன்மையும் இத்தலத்துக்குச் சிறப்புச் சேர்க்கிறது.

பனை மரத்தடியில் சிவலிங்கம் அமைந்திருக்கிறது. இந்த திவ்யம் "இந்தப் பதிக்கு இணையான வேறு பதிகள் இல்லை என்பதைக் காட்டக் கூடியதாகும்" என்று சொன்னார் கயிலை முனிவர்.

பனசையில்  கடுந்தவத்தில் ஐராவதம்

முனிவர் கூறிய அறிவுரை கேட்டு மகிழ்ந்தது வெள்ளானை. உடனே பனசையை அடைந்தது. செஞ்சடையப்பர் சன்னிதிக்கு அருகில் ஒரு தீர்த்தம் அமைத்தது. புண்ணிய நீராடி, திருநீறு அணிந்து, உள்ளன்புடன் சிவனைப் பூஜித்தது. 12 வருடங்கள் தொடர்ந்து பூஜை செய்த நிலையில் ஒருநாள் சிவபெருமான் காட்சி தந்தார்.

சாபம் விலகியது

இந்திரன் சாபத்தை நீக்கினார். அது முன்போல வெள்ளை நிறமும் பலமும் பெற்றது. சிவபெருமான் வெள்ளானையிடம் தன்னைத் துதிப்பவருக்கு எல்லாச் சாபங்களும் நீங்கும்; முப்பெரும் பாவமும் அகலும் என்று அருள்செய்தார் என்பது புராணம்.

காவிரியோரம் மாடக்கோயில்கள்

காவிரிக்கரையோரம் ஏராளமான மாடக் கோயில்கள் உண்டு. அந்தக் கோயில்களின் பின்பக்கத்தைப் பார்த்தால் யானை படுத்துத் தூங்குவது போல இருக்கும். ஒரு சதுரமும், அரை வட்டமும் சேர்ந்த நிலையில் அமையும் கருவறை. யானையினுடைய பின்பக்கம் போல இருப்பதால் அதை கஜபிருஷ்ட விமானம் என்பார்கள்.

திருப்பனந்தாளில் அஜனீச்வரம் என்ற ஒரு கோயில் உண்டு. அது திருப்பனந்தாளின் ஒரு பகுதியான மேலவெளி என்ற இடத்தில் இருக்கிறது. ஊருடையப்பர் கோயில் என்று அழைக்கிறார்கள். அஜன் என்றால் பிரம்மா. இது ஒரு வைப்புத் தலம்.

காவிரிக்கரையோரம் சிவபெருமானுக்கு இத்தகைய மாடக்கோயில்கள் 70 கோயில்களைக் கட்டினான் கோச்செங் கணான் என்பது இலக்கியக் குறிப்பு. இந்த அஜனீச்வரமும் திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் கோயிலும் முதல் பராந்தகன் காலத்துக்கு அதாவது கி.பி. 907-க்கு முற்பட்டவை என்பதைக் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.

இப்படியொரு மாடக்கோயில் உருவாகக் காரணம்?

திருப்பனந்தாள் புராணத்தில் வெளிப்படையான தகவல் இல்லை என்றாலும் கூட ஊகிக்க முடிகிறது. அருணஜடேஸ்வரரை ஐராவதம் என்ற யானை வழிபட்டது. சாப நீக்கம் பெற்றது என்பது புராணம்.

ஐராவதம் இந்திரன் ஏறும் யானை. வெள்ளானை. நான்கு தந்தங்களை உடையது. யானை வழிபட்ட நேரத்தில் பிரம்மன் வழிபாட்டுக்காக யானை ஏறாத மாடக்கோயில் ஒன்றைக் காட்டி அதில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டிருத்தல் வேண்டும். எனவே அந்தக் கோயில் அஜனீஸ்வரம் எனப்பட்டது.

பிரம்மனின் அருள் பெற விரும்புவோர் செஞ்சடையப்பரை வழிபடுவதுடன் அஜனீஸ்வரத்தையும் தரிசிப்பது நல்லது.

⇭⇭⇭