பனசையின் பெருமைகள் - எல்லா வளங்களும் பெற

வாழ்வு வளம் பெற...

பஞ்சத்தில் வாடிய சோழ நாடு

சோழ வளநாடு சோறுடைத்து’ என்பார்கள். வானம் பொய்த்தால்கூடத் தான் பொய்யாமல் வற்றாத வளம் பெருக்கும் நதியாகப் பண்டைக்காலத்தில் திகழ்ந்தது காவிரி ஆறு. இஞ்சியும், மஞ்சளும் கொஞ்சி விளையாடிய நஞ்சைகள் மிகுந்ததே தஞ்சைத் தரணி.

இப்படி வளங்கள் படைத்த சோழ நாட்டில் கூட ஒருசமயம் கடும் பஞ்சம் வந்தது. மழை வளம் அற்றது. பயிர்ப் பச்சைகள் வாடின. ஆண்டு பலவாக விளைச்சல் இல்லை. எல்லாரும் சோற்றுக்குத் தவித்த நிலை நிலவியது. ஒருவாய்த் தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை.

விண்ணில் இருந்து விழும் மழைநீர் வற்றிவிட்டால் நிலத்தில் உள்ள ஆறு குளங்களில் நீர் அற்றுவிடுவது இயற்கைதானே. குளங்களில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை.

இப்படிப்பட்ட நிலை - இதுவரை சோழ நாடு சந்திக்காத சங்கடம். வந்துவிட்டதை எண்ணி எண்ணி அழலாம் என்று நினைத்தால் கூட கண்ணிலிருந்து கண்ணீர் வரவில்லை. அவ்வளவு வறட்சி தாண்டவமாடிய காலம்.

பசியால் வாடிய கவிகாளமேகம்

அந்த நிலையில் கவிகாளமேகம் சோழ நாட்டில் யாத்திரை செய்தார். அவர் திருப்பனந்தாளுக்குப் போனார். அருணஜடேஸ்வரரை வணங்கினார். அம்பாளை வழிபட்டார். பழைய காலத்தில் எல்லாம் கோயிலில் வழிபட்டபின் பிரசாதம் நிச்சயம் கிடைக்கும்.  இப்படிக் கிடைக்கும் உணவினை உண்டே யாத்திரிகர்கள் காலத்தை ஓட்டிவிடுவார்கள்.

கடும் பஞ்சம் நிலவிய காலத்தில் அன்னதானம் செய்யக்கூடிய அளவுக்குச் சுவாமிக்கு நிவேதனம் செய்ய முடியாதல்லவா? எனவே பஞ்ச காலத்தில் ஆலயங்களில் அன்னதானம் இல்லாமல் இருந்தது.

சுவாமியைக் கும்பிட்டபின் பசியோடு பதினாறு கால் மண்டபத்தில் அமர்ந்தார் கவிராஜ காளமேகம். பசி அவரை வாட்டி வதைத்தது. உண்ண உணவு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருந்தார்.

அன்னம் அளித்த அருணஜடேஸ்வரர்



வைணவத்திலிருந்து சைவத்துக்கு வந்து அற்புதமான பாடல்களைப் பாடியவர் அல்லவா அவர்! புலவர்களோடு அமர்ந்து இலக்கணமும், இலக்கியமும் பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த கடவுளான சிவபெருமான் தமிழும், தமிழ்ப்புலவனும் வாடுவதை எப்படிச் சகித்துக் கொள்வார்? கவிஞருக்கு உணவுப் படைக்க முடிவெடுத்தார் சிவபெருமான். தான் ஒரு சிவாசாரியார் வடிவத்தைத் தாங்கினார். கவி காளமேகம் இருக்கும் இடத்துக்குச் சென்றார். அவருக்கு இலை போட்டுச் சோறு படைத்தார். ‘சாப்பிடு சாப்பிடு’ என்று உபசாரம் செய்தார். குடிக்கத் தண்ணீரும் அளித்தார். பஞ்ச காலத்தில் தனக்கு உதவியவன் பரமன் என்பதை அவர் அறிந்தார் இல்லை. பாராட்டிப் பாடினார்.

விண்ணீரும் வற்றிப் புவிநீரும் வற்றி விரும்பி  அழக்

கண்ணீரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற காலத்திலே

உண்ணீர் உண்ணீர் என்று உபசாரம் பேசி உண்மையுடன்

தண்ணீரும் சோறும் தருவான் திருப்பனந்தாள்  பட்டனே

என்பது காளமேகப் புலவர் பாடிய பாடல்.

தன் பக்தனுக்காகப் பட்டர் வடிவில் வந்து உணவு படைத்துப் பசி தீர்த்த பரமன்தான் திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர். பசியாலும், வறுமையாலும் வாடுபவர்கள் அவரை வழிபட உள்ளன்போடு நினைக்கப் பசிப்பிணி அகற்றி வளமெல்லாம் தருவார் என்பதில் ஐயமில்லை.

எல்லா வளங்களும் பெற, அன்னதானம்!

வாய்ப்பு வசதி உள்ளவர்கள், செல்வ வளத்தில் சிறந்தவர்கள் சிவபெருமான் அன்னதானம் செய்த இந்தத் தலத்தில் சக்திக்கேற்ப அன்னதானம் செய்ய வளங்கள் எல்லாம் கிடைக்கும். வாழ்வு நலம் சிறக்கும்.

⇭⇭⇭