பனசையின் பெருமைகள் - பொய் சொன்ன பாவம் போக

  பொய் சொன்ன வாய்க்கு... 


பொய் சொல்லாதவர்கள் உலகத்தில் இல்லை என்றே சொல்லலாம். உண்மைக்காக உயிரைக் கொடுத்தவன் அரிச்சந்திரன் மட்டும்தானே. சிலர் சிலநேரங்களில் பொய் சொல்கிறார்கள். பலர் சிலநேரங்களில் உண்மை பேசுகிறார்கள். பொய் பேசுவது காலத்தின் கட்டாயமாகக் கூடப் போய்விட்டது.

கிராமங்களில் வாழ்பவர்கள் பொய் பேசுவதற்குப் பயப்படுவார்கள். பொய் சொன்னால் வறுமைதான் வரும்; சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பது அவர்களிடம் நிலவும் நம்பிக்கைகளில் ஒன்று. பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்ற பழமொழி திட்டவட்டமாகச் சொல்லும் உண்மையும் இதுதான்.

உலகத்தில் செய்யக்கூடிய பல அறச்செயல்கள் இருக்கின்றன. பொய் பேசாமலிருத்தல் என்பது ஓர் அறநெறி. பொய்யாமை என்று இதைச் சொல்வார்கள். பாமரன் ஒருவனுக்குப் பல நாட்களாக ஒரு சந்தேகம் அவன் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது. பொய் பேசாமல் மட்டும் இருந்தால் போதுமா? வேறு வேறு தர்மங்களும் செய்ய வேண்டுமா என்பதுதான் அவன் மனத்தை அரித்த சந்தேகம்.

வள்ளுவரிடத்தில் சென்று விளக்கம் கேட்டான். பொய்யாமையை மட்டும் கடைப்பிடி போதும்; பிற தர்மங்களைச் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று

 என்று திட்டவட்டமாக சொன்னார் வள்ளுவர்.


பொய் பேசினால் தோஷம் வரும். நம்மையறியாமலேயே பாவங்கள் சேரும். எப்படிப் பாவங்கள் சேரும் தெரியுமா? பஞ்சமகா பாதகங்கள் பெரிது என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கெல்லாம் கூடப் பரிகாரம் உண்டு; கழுவாய் உண்டு என்கிறது புறநானூறு.

வேதம்வல்ல அந்தணர்களைக் கொல்லக்கூடாது; பெண் கொலை புரிவது பாவம்; குழந்தைகளை அழிப்பது கொடும் பாவம். ஆனால் இந்தப் பாவங்களையெல்லாம் விடக் கொடுமையானது பொய் சொல்வது என்கிறது திருப்பனந்தாள் புராணம்.


பொன்ற வான்அந்தணர் பெண் புதல்வரைக்
கொன்ற பாதகத்தில் கொடும் பொய்


என்பது செஞ்சடை வேதிய தேசிகர் வாக்கு.


பொய் சொல்வது பாவம். இந்த விதி மனிதர்களுக்கு மட்டுமல்ல தெய்வத்துக்கும் பொருந்தக்கூடியது என்பதை விளக்குகிறது சிவமகாபுராணத்தில் உள்ள வரலாறு.

பிரம்மவுக்கும், விஷ்ணுவிற்கும் போட்டி!

ஒரு காலகட்டத்தில் பெரியவர் யார் என்ற பிரச்னை பிரம்மவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் வந்தது. இருவரும் தம்முள் போரிட்டனர். பிரச்னைக்கு முடிவு கட்ட நினைத்தார் சிவபெருமான். அவர்களுக்கு முன் சென்றார். ஒரு போட்டியை அறிவித்தார். தன் அடி அல்லது முடியை யார் அறிகிறார்களோ அவர்களே உயர்ந்தவர்கள் என்பது அவர்களுக்கு வைக்கப்பட்ட போட்டி. இருவரும் ஒப்புக் கொண்டனர்.

வராக அவதாரம் எடுத்தார் விஷ்ணு !

வராக அவதாரம் எடுத்து விஷ்ணு அடிதேடிப் புறப்பட்டார். ஒருநிலையில் தன்னால் இயலாது என்பது அறிந்து திரும்பினார்.

அன்னத்தின் வடிவில் பிரம்மா!

பிரம்மதேவன் அன்னத்தின் வடிவம் எடுத்தான்; முடிதேடிப் புறப்பட்டான். பல ஆண்டுகள் கடந்த பின்னாலும் கூட முடியைக் காணமுடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்படவில்லை.

பிரம்மாவின் பொய்

எப்படியாவது ஜெயிக்க நினைத்திருந்த நிலையில், எதிரே வந்த ஒரு தாழம்பூவைச் சந்தித்தான்; தாழையைப் பொய் சாட்சி சொல்லுமாறு கேட்டுக் கொண்டான். அதுவும் இசைந்தது. பூமிக்குத் திரும்பினான்.

சிவபெருமானிடம் தான் முடியைக் கண்டதாகவும் தாழம்பூ அதற்குச் சாட்சி என்றும் சொன்னான். தாழம்பூவும் பிரம்மன் முடியைக் கண்டபோது தானிருந்ததாகப் பொய் சாட்சி சொல்லிற்று.

சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மாவும், தாழம்பூவும்!

உண்மையைச் சிவபெருமான் உணர்ந்தார். பொய் சொன்ன பிரம்மதேவனுக்குப் பூலோகத்தில் தனிக்கோயில்கள் இல்லாமல் போகட்டும் என்று சபித்தார். சிவ பூஜைக்குத் தாழம்பூவுக்கு அருகதை இல்லாமல் போகட்டும் என்று சபித்தார் சிவபெருமான்.

சாபவிமோசனம்

பிழையை அறிந்து சிவபெருமானைப் பலமுறை துதித்தார் பொய் சொன்ன பிரம்மதேவன். மறையவர் வைதிக பூஜையில் இடம்பெறுவாய் என்றும், சிவாலயங்களில் மாடம் ஒன்றில் வைத்து உன்னை வழிபாடுவார்கள் என்றும் சாபவிமோசனம் தந்தார் சிவபெருமான்.

சக்தி வழிபாட்டில் முக்கியத்துவம் அடைவாய் என்றும், சிவராத்திரியில் மூன்றாம் காலத்தில் மட்டும் தான் அணிவதாகவும் தாழைக்குச் சாபவிமோசனம் தந்தார்.

மன அமைதி பெற மீண்டும் சிவனிடம் தஞ்சம்

சாபவிமோசனம் பெற்ற பின்னாலும் கூடப் பிரமனின் மனதில் அமைதி ஏற்படவில்லை. இனமறியாத அச்சம் நிலவி வந்தது. படைப்புத் தொழிலைத் தன்னால் சரியாகச் செய்ய முடியவில்லையோ என்ற எண்ணமும் தலைதூக்கியது. மனக்கவலைகளிலிருந்து விடுபடுவதற்காக வைகுண்டம் சென்றார். நாராயணனிடம், "பொய் ஒன்று சொன்னேன், அதனால் நான் செய்யும் தொழிலில் இடையூறு வந்துவிட்டது; படைப்புத் தரமாக இல்லை; எனக்குப் பழைய வலிமையையும், பெருமையையும் தரவேண்டும். அதற்காகச் சிவபெருமானைப் பிரார்த்திக்கப் போகிறேன்" என்று சொன்னார்.

இருவரும் கயிலையை நோக்கிச் சென்றார்கள். சிவபெருமானிடம் பிரம்மன் முறையிட்டான். அப்போது சிவபெருமான் அவர்களிடம் "நான் உங்களின் நாயகன். ஐந்தொழில்களில் ஒன்றுதான் படைத்தல் தொழில். அதன் பெருமையையும் ஏற்றத்தையும் பிரம்மன் நினைக்கவில்லை. தன் தந்தை என்றும் நினைக்கவில்லை. உன்னையும் எதிர்த்தான். அந்தணர்களைப், பெண்களைப், பிள்ளைகளைக் கொன்ற பாவத்தைவிடப் பெரும் பாதகத்தைக் கொடுக்கும் பொய்யினைச் சொன்னான். இருந்தாலும் கூட அவன் பிழை பொறுத்து அருள்செய்வது என்று முடிவெடுத்தேன். அவன் பொய் சொன்னதால் ஏற்பட்டபாவத்திலிருந்தும் பலக்குறைவிலிருந்தும் நீங்குவதற்குச் செல்ல வேண்டிய இடம் ஒன்று உண்டு. நாம் ஒரு காலத்தில் தேவிக்கு ஞானம் உரைத்த இடம் அது. தாலவனம் என்பது அதன் பெயர். அங்குச் சென்று வழிபட அவன் சாபங்கள் போகும்" என்று அருள் செய்தார் சிவபெருமான்.

பிரம்மா திருப்பனந்தாளுக்கு வருகை

சிவபெருமான் அருளிச் செய்தபடி தாலவனம் என்று அழைக்கப்பட்ட திருப்பனந்தாளுக்கு வந்தான் பிரம்மதேவன். பொய்கைக் குளத்தில் நீராடினான். மடி ஆடைகளை உடுத்திக் கொண்டான். திருவெண்ணீறு அணிந்தான். ஆகம விதிப்படி ஜபங்கள் செய்தான். முறைப்படி இறைவனை அபிஷேக ஆராதனைகள் புரிந்து அர்ச்சித்தான்.

செஞ்சடையப்பர் காட்சி தருதல்

இப்படியே பல நாட்கள் பூஜித்தான். ஒருநாள் செஞ்சடையப்பர் அவனுக்குக் காட்சி கொடுத்தார்.

"திசைமுகனே! உன் குறைகள் தீர அருள்செய்தோம். பசுவை, அந்தணர்களைப், பெண்களைச், சிறுவர்களை வதைத்த பாவமும் அதனைக்காட்டிலும் வலிமைபடைத்ததான பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவமும், மற்றக் குற்றங்களும் இந்தப் பொய்கை குளம் எனப்படும் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி என்னை (அருணஜடேஸ்வரரை) வழிபட்டால் தீரும்" என்றார்.

பிரம்மன் நீராடிய பொய்கை - பிரம்ம தீர்த்தம்

அப்போது பிரம்மதேவன், தான் நீராடிய இந்த பொய்கைக்கு தன் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அவரும் "அப்படியே ஆகட்டும்" என அருளினார். அன்றுமுதல் அப்பொய்கை பிரம்ம தீர்த்தம் எனப்படலாயிற்று. பிரம்மதேவன் திருப்பனந்தாளை அழகுபடுத்தினான். திருவீதிகளை உருவாக்கினான்; கோயிலைப் பொலிவுபடுத்தினான், திருவிழாக்களை நடத்தினான். சித்திரை மாதத்தில் பெருவிழா நடத்தினான்.

ஆவணி அமாவாசையில் பிரம சாப நிவர்த்தி தீர்த்தவாரி பொய்கைக் குளத்தில் ஆண்டுதோறும் சம்பிர தாய விழாவாக நடைபெற்று வருகிறது.

⇭⇭⇭