பனசையின் பெருமைகள் - தோஷம் அகன்று ஞானம் கிடைக்க


சனியும், குருவும்...

நவக்கிரகங்களில் குரு ஒரு முக்கியமான கிரகம். குருவினுடைய அருள் இருந்தால்தான் திருமணங்கள் நடக்கும். நல்ல வாழ்க்கை கிட்டும். "சனியைப் போலக் கெடுப்பவரும் இல்லை; குருவைப் போலக் கொடுப்பவரும் இல்லை" என்ற பழமொழி குரு அள்ளிக் கொடுக்கக் கூடிய அருளாளன் என்பதைக் காட்டும்.

குருதோஷங்கள் நீங்க வேண்டும் என்றால் நவக்கிரக குருவை வணங்கலாம். அசுரகுருவை ஆராதிக்கலாம். பிரம்ம குருவைப் போற்றலாம். குமரகுருவைக் கும்பிடலாம். விஷ்ணு குருவை வணங்கலாம்; சக்தி குருவை வழிபடலாம். எல்லாவற்றுக்கும் மேலான சிவகுருவின் அருள் பெறலாம். சப்த குருநாதர்களில் சிவகுருவை வணங்க, நவக்கிரகக் குருவின் தோஷங்கள் போகும் என்பது நிச்சயம்.

ஆதிசிவன் சிவகுரு. அவர் தட்சிணாமூர்த்தி குருவாக எல்லா ஆலயங்களிலும் இருப்பார். சில ஆலயங்களில் மூலவரே சிவகுருவாக இருப்பதும் உண்டு. சிவகுருநாதர், சிவயோகி நாதர் என்ற பெயர்கள் அவருக்கு இருக்கும். அதையொட்டி அவர் யோகியாக இருந்து அருள் செய்ததை விளக்கும் வரலாறுகளும் இருக்கும்.

ஞான சக்திக்கே குருவான அருணஜடேஸ்வரர்

ஆனால் திருப்பனந்தாளில் ஒரு வித்தியாசம். சுவாமி அருணஜடேஸ்வரர் குருவாக இருந்து அருள் செய்திருக்கிறார். சாதாரண நபர்களுக்கல்ல. ஞான சக்தியாக விளங்கும் சக்திக்கே குருவாக இருந்து உபதேசம் செய்திருக்கிறார். அவர் அருணஜடேஸ்வரர் எனப்படுகிறார். வெள்ளந்தாழ் விரிசடை ஞானத்தின் அடையாளம்தான். அதனால் ஜடாமுடிகள் இன்றும் திருப்பனந்தாள் லிங்கத்தில் இருக்கின்றது என்கிறார்கள். ஜடை ஞானத்தின் அடையாளம் என்பதை வேறொரு வகையிலும் தெரிந்து கொள்ள முடியும்.

எட்டுப் பேர் ஞானம் பெறுவதற்காகத் தேவலோகத்திலிருந்து பூமியில் திருவிசலூரில் பிறந்தார்கள். அவர்கள் பெரும் தவம் செய்தார்கள்; ஞானம் பெற்றார்கள். மூலலிங்கத்துடன் ஐக்கியமானார்கள். அதனால் சுவாமி சிவயோகநாதர் எனப்பட்டார் என்கிறார் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர். லிங்கத்தின் திருமுடியில் எட்டு ஜடைக்கற்றைகள் இருக்கின்றன என்பார் அவர். ஜடாமுடி ஞானத்தின் அடையாளம். செஞ்சடையப்பர் ஞானத்தின் அடையாளம். சிவகுருநாதர்.

மந்திர உபதேசம் பெற விரும்பிய உமாதேவி



கயிலை மலையில் ஒருநாள்... உமாதேவிக்கு மந்திர உபதேசம் பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தலங்களில் அருணாசலம் விசேஷம்; பூஜைகளில் மகேஸ்வர பூஜை விசேஷம்; மந்திரங்களில் பஞ்சாட்சரம் விசேஷம். பெரும் பதவி தரக்கூடிய தலம் எது என்று கேட்டாள் உமாதேவி சிவபெரு மானிடம்.

அதற்குச் சிவபெருமான், ‘தென்னகத்தில் பனை மரங்கள் அடர்ந்த தாலவனம் என்ற தலம் உண்டு. அங்குச் சென்று இரு. உனக்கு யாம் அருள் செய்வோம்’ என்றார்.

உமாதேவி திருப்பனந்தாளுக்கு வந்தாள். அவள் பூஜைக்காக  மண்ணி தீர்த்தம் முருகனால் அமைக்கப்பட்டது. இடைவிடாமல் சிவபூஜை செய்தாள். சிவன் அங்கு அவளுக்குக் காட்சி தந்தார். சைவ சித்தாந்த நுட்பங்கள் அனைத்தையும் அவளுக்கு எடுத்துச் சொன்னார். இறுதியில் பஞ்சாட்சரத்தை உபதேசித்தார். தன் திருநீறு, மாலை தரித்து  வாழ்க என்று வாழ்த்தினார்.

"தேவியே! மெய்ஞானமே உன் வடிவம். நீ பூர்வ திசையைப் பார்த்து நம் வலப்பாகத்தில் இருப்பாயாக. உன்னை வணங்கியவருக்கு இந்தப்பிறவியில் ஞானம் கிடைக்கும்; செல்வம் கிடைக்கும்; புத்திரப்பேறு வாய்க்கும்" என்றெல்லாம் வரங்கள் தந்தார்.

தோஷம் நீங்குவதும், ஞானம் கிடைப்பதும் உறுதி

திருப்பனந்தாள் பெரியநாயகியை வணங்க ஞானம், செல்வம் இவைகள் எல்லாம் எளிதில் கிடைக்கும் என்பது  உறுதி.

திருப்பனந்தாள் பெரியநாயகி அம்மை எனப்படும் பிரகன்நாயகிக்குச் சிவபெருமான் பஞ்சாட்சர உபதேசம் செய்ததைப் புராண வரலாறு மட்டுமின்றி ஆலய அமைப்பும் தெளிவாகக் காட்டுகின்றது. சுவாமி அம்பாள் கருவறை அமைப்பு முறை இதனைக் காட்டுகிறது. அம்பாளின் வலது காது சுவாமிப் பக்கம் இருப்பது போல எதிர் எதிராக இருவரும் இருக்கிறார்கள்

அதுமட்டுமல்ல, ஆண்டுக்கொருமுறை சுவாமி அம்பாளுக்குப் பஞ்சாட்சர மந்திர உபதேசம் செய்யும் நிகழ்ச்சி பங்குனி உத்திர நாளில் சம்பிரதாய விழாவாகவும் நடத்தப்படுகிறது.

திருப்பனந்தாள் சுவாமி அம்பாளை வழிபட, கல்விச் செல்வம் கிடைக்கும்; ஞானம் கிடைக்கும். அதுமட்டுமன்று. அவர் ஞானகுருவாக இருந்து அருள் செய்கிறார். குருவருள் கிடைக்கும். குருதோஷங்கள் போகும். குருவின் பார்வை பட்டால் திருமணத் தடைகள் அகலும். திருப்பனந்தாள் நாகதோஷ நிவர்த்தித் தலமாகவும் இருக்கிறது. எனவே மணத் தடைகள் அகலும்; மக்கட்பேறு வாய்ப்பதும் எளிமையாக அமையும்.

⇭⇭⇭