பனசையின் பெருமைகள் - சூரியதோஷம் நீங்க

      சூரியனின் தோஷத்தைத் தீர்த்த திருப்பனந்தாள்

சூரியன் பூஜித்த தலங்கள் சோழ நாட்டில் பல உண்டு. சூரியனுடைய சிவாபராத தோஷத்தைத் தீர்த்த தலம் திருப்பனந்தாள் என்கிறது புராணத்தில் உள்ள எட்டாம் சருக்கம்.

யாகத்தில் சிவனுக்கு அவமரியாதை

தட்சன் ஒரு பெரிய யாகத்தைச் செய்தான்.  அந்த யாகத்தில் சிவனுக்குத் தரவேண்டிய அவிர்ப் பாகத்தைத் தரவில்லை. அவமதித்தான். அந்த யாகத்தில் பிரமன் உட்பட்ட பல்வேறு தேவர்களும் கலந்து கொண்டனர். சூரியனும் கலந்து கொண்டான்.

சிவனால் தண்டிக்கப்பட்ட சூரியன் 

தன்னை அவமதித்தவர்களைத் தண்டிப்பதற்காகச் சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரர் யாகத்தில் கலந்து கொண்டவர்களைத் தண்டித்தார். அப்போது அவர் சூரியனுடைய 32 பற்களையும் உடைத்தெறிந்தார் என்பது புராணம். பல் இல்லாததால்தான் சூரியனுக்கு இளநீர் படைக்கிறோம்.

தண்டனையும், சாபமும் பெற்ற சூரியன் எங்குச் சென்று இந்த ஈனத்திலிருந்து நீங்குவது என்று யோசித்தான். அப்போது திருப்ப னந்தாள் தாடகை ஈச்வரத்தின் பெருமையை அறிந்தான். உடனே அங்குச் சென்றான். பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராடினான்.  செஞ்சடையப்பரை அடைந்தான். அர்க்யம் பாத்யம் அளித்தான்.  ஆன்ஐந்து தேன் முதலிய அபிஷேகங்கள் செய்தான். சிவநாமங்களைச் சொன்னான். மலர் சாத்தினான். விதவிதமான நிவேதனங்களைச் செய்தான். பல்வேறு தீபங்களைக் காட்டினான்.

"செஞ்சடை வேதிய! என் சிவ அபராதங்களை போக்கி அருள வேண்டும்" என்று பிரார்த்தித்தான். அவன்முன் தோன்றினார் சிவன். அவன் பழியை நீக்கினார் என்பது புராணம்.

சூரிய தோஷம் நீக்கும் செஞ்சடையப்பர்

ஒவ்வோர் ஆண்டும் மீன மாதத்தில் செஞ்சடையப்பரைச் சூரியன் வணங்குகிறான் என்கிறது தல புராணம். சூரியன் கிரகங்களின் ராஜா. சூரியனால் பல ஜாதகர்களுக்குத் தொந்தரவுகள் உண்டு. சூரிய தோஷம் இல்லாமல் இருப்பது நல்லது.  சூரியனுக்கே அருள்செய்த செஞ்சடையப்பரை வணங்கச் சூரிய தோஷங்கள் அகலும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

⇭⇭⇭