பனசையின் பெருமைகள் - சந்திரதோஷம் நீங்க

சந்திர தோஷம் நீங்க...




தட்சணின் பெண்களை மணந்த சந்திரன் 

ஒன்பது கோள்களில் ஒரு கோளாகத் திகழ்பவன் சந்திரன். இவன் தட்சணின் பெண்கள் 27 பேரையும் மணம் செய்து கொண்டான். தட்சன் தன் பெண்களைச் சந்திரனுக்கு மணம் செய்து கொடுக்கும் போது அவனிடம், என் எல்லாப் பெண்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும்; ஏற்றத்தாழ்வு காட்டக்கூடாது என்று உறுதி பெற்றுக் கொண்டான். சந்திரனும் அவ்வாறே வாழ்க்கை நடத்தினான். இருந்த போதும் காலப்போக்கில் அவன் மனம் மாறியது. ரோகிணியிடம் அதிகம் ஆசை வைக்கலானான். இதை மற்ற மனைவியர் கண்டித்தார்கள். சந்திரன் திருந்தியபாடில்லை.

தட்சணின் சாபத்தைப் பெற்ற சந்திரன்

இறுதியில் தன் தகப்பனிடம் சென்று முறையிட்டார்கள். இதைக் கேட்ட தட்ச பிரஜாபதி சந்திரனைப் பார்த்து  “அழகான உருவம் இருப்பதால்தானே என் பெண்களை உதாசீனம் செய்தாய், உன் கலைகள் ஒவ்வொன்றாக அழியட்டும்" என்று சபித்தார்.

கைவிரித்த பிரமதேவன் 

சாபம் உடனே பலித்தது. சந்திரன் தேயலானான். பிரமனிடம் சென்று வழிகேட்டான் தட்சன் யாருக்கும் கட்டுப்பட மாட்டார் என்று கைவிரித்தான் பிரமதேவன். திருமாலும் உதவ மறுத்தார்.

கைகொடுத்த சிவன் 

அதன்பின் சிவனைச் சரணடைந்தான். தேய்ந்த நிலையில் இருந்த சந்திரனைத் தன் தலையில் சூடினார் சிவபெருமான்; சந்திரசேகரரானார். ‘தினந்தோறும் ஒரு கலையாக வளரட்டும்’ என்று சாபவிமோசனம் தந்தார். எனவேதான் சந்திரன் வளர்வதும், தேய்வதுமாக இருக்கிறான் என்பது புராணங்களில் சொல்லப்பட்டுள்ள தகவல்.

சந்திரனுக்குச் சாபம் ஏற்பட்டது. அதனால் அவன் அழகு அழிந்தது. விநாயகருடைய சாபம்கூட இதற்குக் காரணம்தான் என்பது விநாயகர் புராணத்திலிருந்து அறியப்படும் செய்தி. சாபம் உற்ற சந்திரனுக்குப் பதவிப் பேற்றிலும் தடுமாற்றம் நிகழ்ந்தது.

சந்திரன் செஞ்சடையப்பரை வழிபட்டதைத் திருப்பனந்தாள் புராணத்தில் ஒன்பதாவது அத்தியாயம் விளக்குகிறது. பொது மகளிரை விரும்புதல் தவறு. மாற்றான் மனைவியை விரும்புவது அதைக் காட்டிலும் தவறு. குரு பத்தினியை விரும்புவது மகாதோஷம். தன் குருநாதரின் பத்தினியை விரும்பி வாழ்ந்ததால் ஏற்பட்ட சாபத்தை அகற்ற வேண்டும் என வேண்டினான் சந்திரன். செஞ்சடையப்பர் அவனுக்கு அருள்செய்தார்.

சந்திரதோஷம் நீங்க...

திருப்பனந்தாளில் சந்திரன் தீர்த்தம் அமைத்தான். சந்திரன் அமைத்த தீர்த்தத்திலோ பொய்கை குளத்திலோ  நீராடித் திங்கட் கிழமைகளில் செஞ்சடையப்பரை வழிபட எல்லாப் பாக்கியங்களும் கிடைக்கும். திங்கட் கிழமைகள் மற்றும் மாசி மாசத்துச் சதுர்த்தசி களில் செஞ்சடையப்பரை வழிபடுவது சந்திர தோஷ நீக்கத்துக்கு வழிசெய்யக் கூடியதாகும்.

⇭⇭⇭